ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா


ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
x
தினத்தந்தி 16 March 2019 11:14 AM GMT (Updated: 16 March 2019 11:14 AM GMT)

இந்திய ஜிம்னாஸ்டிக்சின் முகம், தீபா கர்மாகர். நம் நாட்டில் ஜிம்னாஸ்டிக்சில் சாதிக்க விரும்பும் அனைத்து வீரர், வீராங்கனைக்கும் ஆதர்சம் இவர்தான்.

இந்த துடிப்பான வீராங்கனைக்கு, சாம்பியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கொமன்சி சமீபத்தில் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அதில் முக்கியமானது, ‘‘வருகிற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவுக்கு சவால் கொடுப்பதற்கு நீ பெரிதாக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம், வெளிநாட்டுக்கு இடம்பெயர வேண்டாம். மாறாக, வெளிநாட்டுச் சூழலுக்கு அனுசரித்துச் செல்கிற மாதிரி போட்டிக்கு முன்னதாக ஒன்றிரண்டு வாரங்கள் அங்கு பயிற்சி செய்தால் போதும்.’’

அவர் தொடர்ந்து, ‘‘தீபாவுக்கு இந்தியாவிலேயே நல்ல ஆதரவான அமைப்பு இருக்கிறது. நான் அவருக்குச் சொல்வதெல்லாம், அவர் அமெரிக்கா அல்லது வேறு வெளிநாட்டுக்குச் சென்று குறுகிய காலம் பயிற்சி எடுத்தால் போதும். அதாவது ஒன்றிரண்டு வாரங்கள். சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்யலாம். பின்னர் மீண்டும் அவர் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிடலாம்’’ என்கிறார், ஐந்து முறை ஒலிம்பிக் சாம்பியனான கொமன்சி.

இந்த ருமேனிய ஜாம்பவான் வீராங்கனை, தற்போது லாரஸ் உலக விளையாட்டு அகாடமியின் உறுப்பினராக இருக்கிறார்.

இவரைப் பொறுத்தவரை, ஜிம்னாஸ்டிக்சில் ஒருவர் ஜொலிப்பதற்கு, அவர் குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

‘‘ஆமாம்... கடந்த பல ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக்சில் அமெரிக்கா, ரஷ்யா, ருமேனியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது உண்மைதான். ஆனால் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தீபா போன்ற வீராங்கனைகள் உருவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிகக் கடுமையான போட்டி நிலவும் இடம், உலக ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம். ஆனால் இந்த விளையாட்டில் தீபா பெறும் வெற்றி, மற்ற இந்திய வீராங்கனைகளுக்கும் சர்வதேச அளவில் சாதிப்பதற்கான தன்னம்பிக்கை தரும்’’ என்கிறார்.

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார், தீபா. ஆனால் அவர் கடினமான புரோடுனோவா பிரிவில் பங்கேற்றது தனக்கு ஆச்சரியம் அளித்ததாக கொமன்சி கூறுகிறார்.

‘‘அது மிகவும் கடினமான, சிக்கலான பிரிவு. ஆனால் தீபா அதில் அதிக சிரமமின்றிப் பங்கேற்றார். பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ள நான், தீபாவின் இந்த முயற்சிக்கு நிறைய துணிச்சல் தேவை என்பேன். இந்த அபாயகரமான பிரிவில் பங்கேற்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு வந்திருந்தால், நான் கூட தவிர்த்திருப்பேன். அது இந்த அழகான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையின் அசாத்திய துணிச்சல், அர்ப்பணிப்பின் அடையாளம். ஒலிம்பிக்கில் அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே அபாரம்’’ என்று போற்றிப் புகழ்கிறார்.

உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளுக்குக் கிட்டும் அதிநவீன வசதிகள் தீபாவுக்குக் கிட்டாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு இந்த விளையாட்டில் ஒரு தீவிரம் இருக்கிறது என்கிறார், கொமன்சி...

‘‘நீங்கள் எந்த ஒரு விளையாட்டில் சாதிப்பதற்கும் அதன் மீது ஒரு வெறி வேண்டும். அதுதான் அந்த விளையாட்டில் உள்ள தடைகளைத் தாண்டி சாதிக்க வைக்கும். தீபாவிடம் அதைக் காண முடிகிறது!’’

ஜாம்பவானிடம் இருந்தே ஏராளமாய் பாராட்டுப் பெற்றுவிட்ட தீபா கர்மாகர், இன்னும் தீயாய் செயல்பட்டு தனக்கும், தாய்நாட்டுக்கும் பெருமை சேர்க்கட்டும்.

Next Story