பிற விளையாட்டு

துளிகள் + "||" + bits

துளிகள்

துளிகள்
* ஒலிம்பிக் கால்பந்து தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டின் ஒரு ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, இந்தோனேஷியாவை நேற்று எதிர்கொண்டது. மியான்மரில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் வெற்றி பெற்றது. 2 கோல்களையும் இந்திய வீராங்கனை டாங்மி கிரேஸ் அடித்தார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். இந்த நிலையில் அவர் இந்த ஐ.பி.எல். சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையில் கங்குலி ஆதாயம் பெறும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகிப்பதாக கொல்கத்தாவை சேர்ந்த 3 பேர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இதுபோன்ற புகார்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின், இரட்டை ஆதாயம் சர்ச்சை குறித்து வருகிற 7-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

* இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கருணாரத்னே கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை கொழும்பில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சென்று ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இலங்கை போலீஸ் கருணாரத்னேவை கைது செய்து உடனடியாக ஜாமீனில் விடுவித்தது. இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து இருந்த கிரிக்கெட் வாரியம், வீரர்களின் நடத்தை விதியை மீறிய கருணாரத்னே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இதன்படி கருணாரத்னேவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏறக்குறைய ஒரு டெஸ்ட் போட்டிக்கு வாங்கும் போட்டி கட்டணம் கருணாரத்னேவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ‘முக்கியமான உலக கோப்பை போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற முட்டாள்தனமான செயலை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது’ என்று இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவினர் கிரிக்கெட்டில் சூதாட்டம் உள்ளிட்ட தவறுகள் நடைபெறாமல் தடுக்க இன்டர்போலுடன் (சர்வதேச போலீஸ்) இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டில் உள்ள இன்டர்போல் தலைமை அலுவலகத்தில் அதன் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஊழலை தடுக்க ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினரும், இன்டர்போல் அமைப்பு அதிகாரிகளும் சூதாட்டம் குறித்து தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு அதனை களைய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின் முடிவை அடிப்படையாக வைத்து குஜராத் மாநிலம் பரோடா அருகில் உள்ள அல்காபுரியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் சிலர் ஆன்-லைன் மூலம் சூதாட்டத்தில் (பெட்டிங்) ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குஜராத் குற்றப்பிரிவு போலீசார், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான துஷார் அரோத் (வயது 52) உள்பட 19 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களது செல்போன் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒருபோதும் ஈடுபடவில்லை’ என்று துஷார் அரோத் மறுத்துள்ளார்.

* பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 78) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பாரீஸ் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.