புரோ கபடி லீக்: மராட்டிய வீரர் சித்தார்த் தேசாய் ரூ.1½ கோடிக்கு ஏலம்


புரோ கபடி லீக்: மராட்டிய வீரர் சித்தார்த் தேசாய் ரூ.1½ கோடிக்கு ஏலம்
x
தினத்தந்தி 8 April 2019 10:30 PM GMT (Updated: 8 April 2019 7:45 PM GMT)

புரோ கபடி லீக் போட்டிக்காக, மராட்டிய வீரர் சித்தார்த் தேசாய் ரூ.1½ கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

மும்பை,

7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர். தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், மன்ஜீத் ஷில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகிய 3 வீரர்களை தக்கவைத்து இருந்தது. இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது. நிதின் தோமரை புனேரி பால்டன் அணி இறுதி ‘பிட் மேட்ச் கார்டு’ வாய்ப்பு மூலம் ரூ.1.20 கோடிக்கு தக்க வைத்தது. கடந்த சீசனில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் முன்னணி ரைடராக விளங்கிய மோனு கயாத் ரூ.93 லட்சத்துக்கு உ.பி.யோத்தா அணிக்கு மாறினார். தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரியை ரூ.94 லட்சத்துக்கு தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சந்தீப் நார்வால் ரூ.86 லட்சத்துக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் ஈரானை சேர்ந்த முகமது இஸ்மாயில் அதிகபட்சமாக ரூ.77.75 லட்சத்துக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியால் வசப்படுத்தப்பட்டார். இந்த ஏலம் இன்றும் நடக்கிறது.

Next Story