பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thuligal in sports news

துளிகள்

துளிகள்
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா, மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி ஜெயின் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
* டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து இழிவாக பேசியது சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து இருவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் தங்கள் மீதான புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா, மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி ஜெயின் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள லோகேஷ் ராகுல் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுவார் என்று தெரிகிறது.


* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய கனவு அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவுக்கு அவர் தனது கனவு அணியில் இடம் வழங்கவில்லை. ஆனால் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை முடிந்து களம் திரும்பி இருக்கும் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு அவர் அணியில் இடம் வழங்கி இருக்கிறார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தியது. 2 விக்கெட் வீழ்த்திய ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா தோல்விக்கு பிறகு கூறுகையில், ‘இங்கு காலையில் மழை பெய்தது. இதனால் இரவில் ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக காணப்பட்டதால், முதலில் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. ஆனால் போக போக பனியும் அதிகமாக பொழிந்தது. இதனால் பிற்பகுதியில் பந்து வெகுசீக்கிரமாக ஈரப்பதமாகியது. பனியின் தாக்கத்தால் பந்தை சரியாக பிடித்து வீசுவதில் சிரமப்பட்டோம். இது எதிரணி வீரர்களுக்கு பேட்டிங் செய்வதற்கு எளிதாக மாறியது. எங்கள் அணியில் நானும், புவனேஷ்வர்குமாரும் பந்தை ‘ஸ்விங்’ செய்யக்கூடியவர்கள். புதிய பந்தில் ‘ஸ்விங்’ செய்து விக்கெட்டை வீழ்த்த முயற்சிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஏற்கனவே சொன்னது போல், பனியால் பந்து நன்கு ஈரமானதால் ‘ஸ்விங்’குக்கு உதவவில்லை. இறுதியில் லோகேஷ் ராகுல் (71 ரன், நாட்-அவுட்) சிறப்பாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்து விட்டார்’ என்றார்.