பேட்மிண்டனில் பெருமை சேர்க்கும் மதுரை வீராங்கனை


பேட்மிண்டனில் பெருமை சேர்க்கும் மதுரை வீராங்கனை
x
தினத்தந்தி 4 May 2019 7:08 AM GMT (Updated: 4 May 2019 7:08 AM GMT)

பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துவருகிறார், மதுரை மாணவி வர்ஷினி.

துறுதுறுப்பான வீராங்கனையான வர்ஷினி, பேட்மிண்டன் களத்தில் இறங்கிவிட்டால் கலக்கிவிடுகிறார். இதை நாம் சொல்லவில்லை. மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

தேசிய அளவில் முத்திரை பதித்து, அதன் மூலம் 4 முறை இந்திய அணிக்கும் ஆடும் பெருமை பெற்றிருக்கிறார், வர்ஷினி.

வர்ஷினியின் திறமைக்கு அவர் வாங்கிக் குவித்திருக்கும் பதக்கங்களும், பரிசுகளுமே சான்றுகள்.

‘பொழுதுபோக்குக்காக பேட்மிண்டன் மட்டையைக் கையில் எடுத்தேன். இப்போது அது எனக்கு இன்னொரு கை போல மாறிவிட்டது. விளையாட்டே எனது வாழ்க்கை என்றாகிவிட்டது’ என்று முகத்தில் பெருமை ஜொலிக்கச் சொல்கிறார், இந்த 16 வயது இளம்வீராங்கனை.

அடுத்தபடியாக, பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக தாய்லாந்து, இந்தோனேசியா செல்லத் தயாராகிக் கொண்டிருந்த வர்ஷினியிடம் நாம் கேள்விகளைத் தொடுத்தோம்...

பேட்மிண்டனில் சின்ன வயதில் பெரிய பெரிய சாதனைகளை எப்படி நிகழ்த்த முடிந்தது?

என் தந்தை விஸ்வநாத், மரப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தாயார் விஜி, இல்லத்தரசி. அக்கா ரோஷிணி திண்டுக்கல்லில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தாத்தா கோபாலகிருஷ்ணன், பாட்டி கஸ்தூரி. இதுதான் எங்கள் குடும்பம். நான் மதுரை டி.வி.எஸ். பள்ளியில் பிளஸ்-1 பயில்கிறேன்.

விளையாட்டுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் பந்தம் எதுவும் கிடையாது. என்னுடைய தந்தை பொழுதுபோக்குக்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் வீட்டு மாடியில் பேட்மிண்டன் விளையாடுவார். ஒருநாள் அவருடன் விளையாடுவதற்கு யாரும் வரவில்லை. அப்போது என்னை விளையாட வைத்தார். அதன்பின்னர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் தந்தைக்கு எதிராக ஆடினேன்.

எனக்கு 8 வயது இருக்கும். வீட்டில் என் சேட்டை தாங்க முடியாமல் பாட்டு கற்றுக்கொள், டான்ஸ் கற்றுக்கொள் என்று அனுப்பினார்கள். அந்த வகுப்புகளும் வாரத்தில் இரண்டே நாட்கள்தான்.

மற்ற நாட்களில் வீட்டில் என் லூட்டி தொடர்ந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் என்னை பேட்மிண்டன் விளையாடும்படி கூறினார்கள். பயிற்சியாளர் சரவணனிடம் சேர்த்துவிட்டு, பயிற்சி பெறவும் வைத்தார்கள். ஆரம்பத்தில், ஏதோ சென்று வருவோம் என்ற எண்ணத்தில் பயிற்சி பெற்ற நான், பின்னர் எப்படியோ பேட்மிண்டனுக்கு அடிமையாகிவிட்டேன். அந்த அளவுக்கு இந்த விளையாட்டு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நீங்கள் பங்கேற்ற போட்டிகள் பற்றி?

ஆரம்பத்தில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாடத் தொடங்கிய நான், அடுத்து மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் என படிப்படியாக முன்னேறி விளையாடிக் கொண்டிருக்கிறேன். இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி, மியான்மர், நெதர்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்குச் சென்று விளையாடிவிட்டேன். இந்தியாவில் பெங்களூரு, விஜயவாடா, ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் மட்டையைச் சுழற்றி இருக்கிறேன். பேட்மிண்டனில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவுகளிலும் நான் விளையாடுவேன். ஒற்றையர் பிரிவில் வெல்வதற்கு என்னுடைய தனித்திறமை மட்டும் போதும். ஆனால், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில், என்னுடன் விளையாடுபவரும் திறமையாக இருக்க வேண்டும், இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும்.

நாட்டுக்காக விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?

நான் இந்திய அணி சார்பில் இதுவரை 4 முறை விளையாடி இருக்கிறேன். 2017, 2018-ல் மியான்மரில் நடந்த போட்டிகள், 2018-ல் இந்தோனேசியா, 2019-ல் ஜெர்மனியில் நடந்த போட்டிகளில் ஆடி இருக்கிறேன். இதில் 2018-ல் நடந்த போட்டியில் 4-வது இடத்தையும், ஜெர்மனியில் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று வந்திருக்கிறேன். அடுத்து தாய்லாந்து, இந்தோனேசியாவில் நடக்கும் போட்டியிலும் சாதிக்கும் எண்ணத்துடன் இருக்கிறேன். நான் விளையாடச் செல்லும்போது என்னுடன் தாய், தந்தை இவர்களில் யாரேனும் ஒருவர் உடன் வருவார்கள். அவர்களின் ஒத்துழைப்பால்தான் என்னால் வெளிநாட்டிலும் வெற்றிகளை ஈட்ட முடிந்திருக்கிறது.

படிப்பில் நீங்கள் எப்படி?

நான் 4-ம் வகுப்பு முதல் பேட்மிண்டன் விளையாடி வந்தாலும், 8-ம் வகுப்பு வரை 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுவந்தேன். அதன்பிறகு, பள்ளி தவிர பயிற்சிக்குச் செல்வதற்கு மட்டுமே நேரம் இருந்தது. ஒருநாளைக்கு சுமார் 7 முதல் 8 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொள்வேன். பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றால் கூட, பாடங்களைப் படித்து விடுவேன். அதனால்தான், 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 427 மதிப்பெண்கள் பெற்றேன். தற்போது பதினோராம் வகுப்பில் வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்து படித்து வருகிறேன். எனக்கு பள்ளியில் இருந்து பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. நான் இந்த அளவுக்கு சாதிக்க எங்கள் பள்ளியும் ஒரு காரணம்.

நீங்கள் முன்மாதிரியாகக் கருதும் பேட்மிண்டன் வீராங்கனை?

பேட்மிண்டன் விளையாட்டில் என்னுடைய ரோல் மாடல் பி.வி. சிந்துதான். அவரைப் போல் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஒருமுறை ஐதராபாத்தில் நடந்த போட்டியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தேன். சிந்துவும் அங்கு வந்திருந்தார். என்னோடு பேசிய அவர், எனக்கு வாழ்த்துக் கூறினார். அது மறக்கமுடியாத தருணம்.

தரவரிசையில் நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கிறீர்கள்?

தமிழக அளவில் 2014 தொடங்கி 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறேன். தேசிய அளவில் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2016-ம் ஆண்டில் முதல் இடம் பெற்றேன். இதுவரை நான் கலந்துகொண்ட போட்டிகளில் 16 முறை சாம்பியன் பட்டத்தையும், 40 முறை முதல் பரிசையும் பெற்றிருக்கிறேன். இதுபோல், தமிழகத்தில் சென்னை, தருமபுரி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் 4 முறை முதல் பரிசையும், ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றிருக்கிறேன். சர்வதேச அளவிலும் பல பரிசுகள் பெற்றுள்ளேன்.

விளையாட்டு தவிர உங்களின் பிற திறமைகள்...?

நான் நடனம் ஆடுவேன். பாட்டு மீதும் ஆர்வம் அதிகம். எனது நடன அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாட்டு, நடனத்தையும் ஒரு கை பார்த்துவிடுவேன்.

உங்கள் லட்சியம்?

இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதும் என் லட்சியங்கள். அவற்றை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். கடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக ஐதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்தும் இருக்கிறேன்.

இவ்வாறு கண்களில் நம்பிக்கை ஒளி மிளிர வர்ஷினி கூறி முடித்தார். அவரது சாதனைப் பயணம் தொடர வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.


Next Story