முதலில் காயம்.. பின்பு பதக்கம்..


முதலில் காயம்.. பின்பு பதக்கம்..
x
தினத்தந்தி 5 May 2019 6:30 AM GMT (Updated: 5 May 2019 6:30 AM GMT)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பூஜா ராணி.

தாய்லாந்தில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர், பூஜா ராணி. இறுதி போட்டியில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் வாங் லினாவுடன் கடுமையாக போராடி வெற்றியை தன்வசமாக்கி இருக்கிறார். குத்துச்சண்டை களத்தில் மட்டுமல்ல வாழ்க்கை களத்திலும் ஏராளமான போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார், பூஜா ராணி.

தந்தையே அவரை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று வீட்டில் முடக்கிப்போட்டிருந்திருக்கிறார். அதனால் ஆறு மாதங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். பின்பு தந்தையுடன் போராடி அனுமதி வாங்கி பயிற்சி மேற்கொண்டிருக்கிறார், பூஜா ராணி.

பொதுவாக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பவர்கள் காயங்களால் அவதிப்படுவார்கள். எதிராளியை சாதுரியமாக சமாளிக்கும் மன வலிமை இல்லாவிட்டால் ரத்தம் சிந்தி பலத்த காயங் களால் அவதிப்படும் சூழலும் உருவாகும். பூஜா ராணியும் அத்தகைய வலிகளை அனுபவித்திருக்கிறார்.

‘‘நல்ல பிள்ளைகள் குத்துச்சண்டை விளையாடமாட்டார்கள் என்று என் தந்தை அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். போட்டியில் பங்கேற்கும்போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். நான் காயம் அடைந்திருப்பதை தந்தை பார்த்துவிட்டால் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார். அதனால் காயங்களை அவரிடம் இருந்து மறைத்துவிடுவேன்’’ என்கிறார்.

அப்படி இருந்தும் பூஜா ராணி காயம் அடைந்திருக்கும் விஷயம் அவரது தந்தைக்கு தெரிந்துவிட்டது. அதனால் குத்துச்சண்டை பயிற்சி வகுப்புக்கு செல்லக்கூடாது என்று தடை செய்துவிட்டார். பின்னர் பூஜா ராணியின் பயிற்சியாளர் சஞ்சய் குமார் தலையிட்டு அவருடைய திறமைகளை எடுத்துக்கூறி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வைத்திருக்கிறார். 2009-ம் ஆண்டு நடந்த தேசிய இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் பூஜா ராணி வெள்ளிப்பதக்கம் பெற்றார். அந்த வெற்றிக்கு பிறகு அவருடைய பெற்றோரின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அதனை சாதகமாக பயன்படுத்தி படிப்படியாக பெற்றோரின் ஆதரவை பெற்றிருக்கிறார். 2012-ம் ஆண்டு நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் வெண்கல பதக்கமும், 2016-ம் ஆண்டு நடந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.


Next Story