பிற விளையாட்டு

வறுமை தாண்டி வானைத் தொடும் வீரர் + "||" + Beyond poverty Winning player

வறுமை தாண்டி வானைத் தொடும் வீரர்

வறுமை தாண்டி வானைத் தொடும் வீரர்
வறுமை ஒருபுறம் தடை போட்டாலும், அதையும் தாண்டி சர்வதேச அரங்கில் இந்தியக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார், சென்னை வலுதூக்குதல் வீரர் நவீன்.
சமீபத்தில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை அள்ளி வந்திருக்கும் நவீனுடன் பேசுவோம்...

?ஹாங்காங் போட்டியில் நீங்கள் வென்ற பதக்கங்கள் பற்றிக் கூறுங்கள்...

ஹாங்காங்கில் கடந்த மாதம் நடந்த ஆசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் சப்-ஜூனியர் பிரிவில் நான் 3 தங்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றேன். ஸ்குவாட் பிரிவு, டெட் லிப்ட் பிரிவு மற்றும் ஒட்டுமொத்த அளவில் தலா ஒரு தங்கப் பதக்கமும், பெஞ்ச் பிரஸ் பிரிவில் ஒரு வெண்கலமும் கைப்பற்றினேன்.

?சர்வதேச வெற்றி மேடையில் நின்ற அந்தக் கணம் குறித்து?

நாட்டுக்காக பதக்கம் வெல்வது எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் வீராங்கனைக்கும் அளவில்லாப் பெருமிதமும் நிறைவும் தருவது. அந்தவகையில், ஹாங்காங்கில் எனக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதும், அப்போது தேசிய கீதம் ஒலிக்க நமது கொடி கம்பீரமாக உயர்ந்தபோது எல்லோரும் எழுந்து நின்றதும் சிலிர்ப்பூட்டும் கணங்கள்.

?சென்னைதான் உங்கள் சொந்த ஊரா?

ஆம். நான் சென்னை அயனாவரத்தில் வசிக்கிறேன். அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் பொருளாதாரம் முதலாமாண்டு படிக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டின் பொருளாதாரம் தாழ்வான நிலையில்தான் இருக்கிறது. அப்பா ஒரு சிறு சைக்கிள் கடையை நடத்தி, குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார். ஆனால் ஊட்டச்சத்து உணவுகள் போன்ற, ஒரு விளையாட்டு வீரரான எனக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறார். அருண் பாலாஜி, பிரதீப்குமார் ஆகிய பயிற்சியாளர்கள் எனக்கு இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்ததால்தான் என்னால் இவ்வளவு தூரத்துக்கு உயர முடிந்திருக்கிறது.

?ஹாங்காங்கில் நீங்கள் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் என்ன?

இந்த வெற்றியால்தான் நான், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறேன். அதிலும் நாட்டுக்காகப் பதக்கங்களை வென்று வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

?ஆசியப் போட்டி வெற்றிக்குக் கிடைத்த பாராட்டுகள் குறித்து?

ஹாங்காங்கில் இருந்து நான் வெற்றியுடன் திரும்பியபோது, வலுதூக்குதல் சங்க நிர்வாகிகள், இவ்விளையாட்டு ஆர்வலர்கள், என் நலன்விரும்பிகள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், டுவீட்டரில் எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.

?இந்த ஆண்டு நீங்கள் பெற்ற பிற முக்கியமான வெற்றிகள்?

கொல்கத்தாவில் கடந்த ஜனவரியில் நடந்த பெடரேஷன் கோப்பை வலுதூக்குதல் போட்டியில் முதலிடம் பெற்றேன். அதன் மூலம்தான், ஆசியப் போட்டிக்குத் தகுதியுற்றேன். பெடரேஷன் கோப்பை போட்டிக்கு முன்பாக, புதுச்சேரியில் நடந்த தென்னிந்திய வலுதூக்குதல் போட்டியில் வென்றேன். ‘ஸ்டிராங் மேன்’ பட்டமும் கிடைத்தது.

?வலுதூக்குதல் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனது?

அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் வலுதூக்குதல் பற்றி அறிந்து, இதில் ஈடுபடத் தொடங்கினேன். முதன்முதலில், மாவட்ட அளவில் வெண்கலம் வென்றது, எனக்கு இவ்விளையாட்டில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாநில, தேசிய, சர்வதேசப் போட்டிகள் என்று முன்னேறினேன்.

?நீங்கள் இதுவரை எத்தனை பதக்கங்கள், பட்டங்கள் வென்றிருக்கிறீர்கள்?

நான் நாற்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும், எட்டு முறை ‘ஸ்டிராங் மேன்’ பட்டத்தையும் வென்றிருக்கிறேன்.

?நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்கிறீர்கள்?

நான் தினமும் காலையிலும் மாலையிலும் மொத்தம் 4 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். பயிற்சியின்போது பயிற்சியாளர்களுடன், எங்கப்பாவும் எனக்கு உதவியாக இருப்பார்.

?உங்களின் உச்ச லட்சியம் என்ன?

உலக வலுதூக்குதல் போட்டியில் பங்கேற்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதே என் உச்ச லட்சியம். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகப் போட்டிக்கு நான் தகுதி பெற்றேன். ஆனால் குடும்பச் சூழலால் அப்போட்டியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அடுத்த உலகப் போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளேன். அதற்கு முதல்கட்டமாக, காமன்வெல்த் போட்டியில் சாதிக்க வேண்டும். இப்போட்டிக்குத் தகுதி பெறுவது எனது பொறுப்பு. அதை நிறைவேற்றி விட்டேன். இனி, இப்போட்டியில் கலந்துகொள்ள பிறர் உதவி அவசியம். அரசு அல்லது தனியார் கைகொடுத்தால், என்னால் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் நிச்சயம் பெருமை சேர்க்க முடியும்.

?உங்களுக்கு உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு எப்படி?

அப்பா, எனக்காக வலுதூக்குதலில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுவிட்டார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள அப்பாவால், சிறுவயதில் வறுமை நிலையால் விளையாட்டில் உயர முடியவில்லை. எனவே என்னை விளையாட்டுத் துறையில் சாதிக்க வைக்க பின்னணியில் இருந்து உழைக்கிறார். இல்லத்தரசியான அம்மா துர்காதேவி, 10-ம் வகுப்பு பயிலும் தங்கை சுசித்ரா ஆகியோரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்.

?அடுத்து நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் முக்கியமான போட்டி என்ன?

வேலூரில் இம்மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ள தேசிய சப்-ஜூனியர் வலுதூக்குதல் போட்டி. அதில் சாதிப்பதற்காக நான் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

திறமையும் சாதிக்கும் துடிப்பும் உள்ள இளம் வீரர் நவீனை வறுமை முடக்கிப்போட்டுவிடக் கூடாது. அதற்கு, தகுதிவாய்ந்தவர்களின் கரங்கள் தாராளமாய் நீள வேண்டும்.