அகில இந்திய கைப்பந்து: தென் மத்திய ரெயில்வே அணி அரைஇறுதிக்கு தகுதி


அகில இந்திய கைப்பந்து: தென் மத்திய ரெயில்வே அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 Jun 2019 10:11 PM GMT (Updated: 27 Jun 2019 10:11 PM GMT)

தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கேரள போலீஸ் அணி 25-21, 25-20, 21-25, 25-22 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். (சென்னை) அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தென் மத்திய ரெயில்வே அணி 25-14, 25-15, 21-25, 25-15 என்ற செட் கணக்கில் சாய் (தலச்சேரி) அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் ஐ.சி.எப்., டாக்டர் சிவந்தி கிளப் (ஏ பிரிவு) தனது பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. ‘பி’ பிரிவில் தென் மத்திய ரெயில்வே, சாய் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஐ.சி.எப்.-சாய், தென் மத்திய ரெயில்வே-டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் மோதுகின்றன.

ஆண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் வருமான வரி (சென்னை) அணி 21-25, 25-18, 20-25, 25-21, 15-5 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) அணியை வீழ்த்தி முதல் வெற்றியை சொந்தமாக்கியது. இதே போல் இந்தியன் வங்கி (சென்னை) அணி 25-23, 25-18, 25-21 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றதுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது.

Next Story