மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை ஜெனித்தா தங்கப்பதக்கம் வென்றார்


மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை ஜெனித்தா தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 9:28 PM GMT)

திருச்சி வீராங்கனை ஜெனித்தா மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தங்கம் வென்றார்.

திருச்சி, 

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் காணிக்கை இருதயராஜ். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். இவருடைய மகள் ஜெனித்தா ஆண்டோ. இவர் சுலோவாக்கியா நாட்டில் உள்ள ரூசோம்பர்க் நகரில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான 19-வது உலக செஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் கலந்து கொண்டார். இவருடன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வீரர் அங்கப்பனும் பங்கேற்றார். இந்த போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த 44 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஜெனித்தா தங்கப்பதக்கம் வென்றார். அவர் தொடர்ந்து 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து ஜெனித்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். தங்கப்பதக்கம் வென்ற ஜெனித்தா, மற்றொரு வீரரான அங்கப்பன் ஆகியோர் நேற்று விமானம் மூலம் திருச்சி திரும்பினர். விமான நிலையத்தில் ஜெனித்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவராசு ஜெனித்தாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜெனித்தா நிருபர்களிடம் பேசுகையில், ‘உலக செஸ் போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை ஊக்குவித்த எனது தந்தை, பயிற்சியாளர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்து 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய போட்டியில் பதக்கம் வெல்வதே லட்சியம்’ என்று தெரிவித்தார்.

Next Story