பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி + "||" + Pro Kabaddi: Bengaluru team win thriller

புரோ கபடி: பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி

புரோ கபடி: பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி
12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பாட்னா,

12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்று இரவு நடந்த 23–வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்–ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி முதல் பாதியில் 15–9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பின்பாதியிலும் ஜெய்ப்பூர் அணியின் ஆதிக்கமே நீடித்தது. முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 34–21 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தியது. ஜெய்ப்பூர் அணியில் தீபக் நார்வால் 9 புள்ளியும், சந்தீப் துல் 8 புள்ளியும் குவித்தனர். 4–வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி தொடர்ச்சியாக பெற்ற 4–வது வெற்றி இதுவாகும். 4–வது ஆட்டத்தில் களம் கண்ட பாட்னா பைரட்ஸ் அணி சந்தித்த 2–வது தோல்வி இது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்–பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பெங்கால் அணி 21–18 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பின் பாதியில் பெங்களூரு அணி, பெங்கால் அணிக்கு கடும் சவால் அளித்தது. கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் இரு அணிகளும் 41–41 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 43–42 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. பெங்களூரு அணியில் பவான் ஷெராவத் 29 புள்ளிகள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 4–வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 3–வது வெற்றி இது. 4–வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி 2–வது தோல்வியை சந்தித்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்–அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ்–புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.