புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’


புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’
x
தினத்தந்தி 8 Aug 2019 12:00 AM GMT (Updated: 8 Aug 2019 12:00 AM GMT)

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ்-உ.பி.யோத்தா மோதிய திரில்லிங்கான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

பாட்னா,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்று இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி முதலில் தொடர்ச்சியாக 2 புள்ளிகளை பெற்றது. அதன் பிறகு உ.பி.யோத்தா அணி கடும் நெருக்கடி அளித்து 3-3 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டியதுடன் தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்து தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. முதல் பாதி ஆட்டம் முடிவில் உ.பி.யோத்தா அணி 16-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோத்தாவை விரைவில் ‘ஆல்-அவுட்’ செய்ய கிடைத்த நல்ல வாய்ப்பை 3 முறை நழுவவிட்டது. அதில் ராகுல் சவுத்ரி, அஜய் தாகூர் ஆகியோர் ரைடில் சூப்பர் டேக்கிளில் ஆட்டம் இழந்து தலா 2 புள்ளிகளை தாரை வார்த்தனர். ஒரு வழியாக அந்த சரிவை சமாளித்து மீண்ட தமிழ் தலைவாஸ் அணி 8 நிமிடம் இருக்கையில் உ.பி.யோத்தாவை ‘ஆல்-அவுட்’ செய்ததுடன் 23-23 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டியது.

அதன் பிறகு உ.பி.யோத்தா தொடர்ச்சியாக 3 புள்ளிகள் சேர்த்து 26-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தமிழ் தலைவாஸ் அணி விவேகமாக செயல்பட்டு 26-26 புள்ளி கணக்கில் மீண்டும் சமநிலை கண்டது. கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. கடைசி ரைடில் தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகூர் ஒரு புள்ளி எடுத்தார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் ‘டை’யில் (சமனில்) முடிந்தது.

5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டையை பெற்றுள்ளது. 5-வது ஆட்டத்தில் களம் கண்ட உ.பி.யோத்தா அணி ஒரு வெற்றி, 2 தோல்வி, 2 டை கண்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 35-26 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சை தோற்கடித்தது. பாட்னா அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நர்வால் ரைடு மூலம் 14 புள்ளிகளை சேகரித்தார். ஒட்டுமொத்தத்தில் அவரது ரைடு புள்ளி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சிறப்பை நர்வால் பெற்றார்.

இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story