3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 5 Oct 2019 10:30 PM GMT (Updated: 5 Oct 2019 8:27 PM GMT)

உலக தடகள போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் 13-வது இடம் பிடித்த இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

தோகா, அக்.6-

உலக தடகள போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் 13-வது இடம் பிடித்த இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பகாமஸ் வீரர் முதலிடம்

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பகாமஸ் வீரர் ஸ்டீவன் கார்டினர் 43.48 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் முதல்முறையாக உச்சி முகர்ந்தார். பான் அமெரிக்கன் சாம்பியனான கொலம்பியாவின் அந்தோணி ஜோஸ் ஜாம்பிரானோ 44.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீரர் பிரெட் கெர்லி 44.17 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தின் இறுதி சுற்றில் கென்யா வீரர் கான்செஸ்லஸ் கிப்ருடோ 8 நிமிடம் 01.35 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து மீண்டும் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். 24 வயதான கான்செஸ்லஸ் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக போட்டியில் 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வெள்ளிப்பதக்கமும், 2017-ம் ஆண்டில் தங்கப்பதக்கமும் வென்று இருந்தார். எத்தியோப்பியா வீரர் லாமிசா ஜிர்மா (8:01.36 வினாடி) வெள்ளிப்பதக்கமும், மொராக்கோ வீரர் சோபியான் பக்காலி (8:03.76 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

அவினாஷ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரான மராட்டியத்தை சேர்ந்த அவினாஷ் சாப்ளே 8 நிமிடம் 21.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 13-வது இடத்தை பிடித்தார். புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் ஒலிம்பிக் தகுதி நேரத்துக்குள் இலக்கை கடந்ததால் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி நேரம் 8 நிமிடம் 22 வினாடியாகும்.

20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் பங்கேற்ற 52 வீரர்களில் 40 பேர் பந்தய தூரத்தை முழுமையாக கடந்தனர். இந்திய வீரர்கள் கே.டி. இர்பான் 1 மணி 35 நிமிடம் 21 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 27-வது இடத்தையும், மற்றொரு இந்திய வீரர் தேவேந்தர் சிங் 1 மணி 41 நிமிடம் 48 வினாடியில் கடந்து 36-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். இந்த போட்டியில் ஜப்பான் வீரர் தோஷிகாஸ் யாமினிஷி 1 மணி 26 நிமிடம் 34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கமும், ரஷிய வீரர் வாசிலி மிஜினோவ் (1:26.49 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சுவீடன் வீரர் பெர்செஸ் கார்ஸ்ட்ரோம் (1:27.00 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

உயரம் தாண்டுதல்

உயரம் தாண்டுதலில் கத்தார் வீரர் முதாஸ் எஸ்சா பார்ஷிம் 2.37 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். அவர் 2017-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இந்த உலக சாம்பியன்ஷிப்பில் போட்டியை நடத்தும் கத்தார் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ரஷிய வீரர்கள் மிகைல் அகிமென்கோ (2.35 மீட்டர்) எல்லா இலக்கையும் முதல் முயற்சியிலேயே தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு ரஷிய வீரர் லியா இவானக் (2.35 மீட்டர்) முந்தைய இலக்கை (2.33 மீட்டர்) 3-வது முயற்சியில் தாண்டி இருந்ததால் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

புதிய உலக சாதனை

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க வீராங்கனை டாலிலா முகமது 52.16 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தை முதல்முறையாக முத்தமிட்டார். ஏற்கனவே டாலிலா முகமது கடந்த ஜூலை மாதத்தில் 52.20 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவர் உலக போட்டியில் 2 முறை (2013, 2017) வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாக்லின் (52.23 வினாடி) வெள்ளிப்பதக்கமும், ஜமைக்கா வீராங்கனை ரஷெல் கிளாய்டன் (53.74 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

வட்டு எறிதலில் கியூபா வீராங்கனை யாய்மி பிரெஸ் 69.17 மீட்டர் தூரம் எறிந்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 2015-ம் ஆண்டில் தங்கப்பதக்கம் வென்றவரான மற்றொரு கியூபா வீராங்கனை டேனியா காபாலிரோ 68.44 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், குரோஷியா வீராங்கனை சான்ட்ரா பெர்கோவிச் 66.72 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 78.97 மீட்டர் தூரம் எறிந்து ஒட்டு மொத்தத்தில் 24-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் நடையை கட்டினார். இந்த போட்டியில் மொத்தம் 32 பேர் பங்கேற்றனர்.

Next Story