சென்னை பல்கலைக்கழக தடகளம்: காருண்யா, ஹேமமாலினி புதிய சாதனை


சென்னை பல்கலைக்கழக தடகளம்: காருண்யா, ஹேமமாலினி புதிய சாதனை
x
தினத்தந்தி 15 Oct 2019 11:51 PM GMT (Updated: 15 Oct 2019 11:51 PM GMT)

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் வட்டு எறிதலில் காருண்யாவும், ஈட்டி எறிதலில் ஹேமமாலினியும் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர்.

சென்னை,

ஏ.லட்சுமணசாமி முதலியார் கோப்பைக்கான 52-வது சென்னை பல்கலைக்கழக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை காருண்யா 46.87 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த ஆண்டில் (2018) அவர் 43.50 மீட்டர் தூரம் எறிந்து படைத்து இருந்த தனது சொந்த சாதனையை தகர்த்தார்.

இதேபோல் ஈட்டி எறிதலில் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை ஹேமமாலினி 47.41 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஏற்கனவே 2005-ம் ஆண்டில் எத்திராஜ் கல்லூரி வீராங்கனை ஜெயந்தி 44.12 மீட்டர் தூரம் எறிந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஹேமமாலினி முறியடித்தார்.

பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நிதின்ஷாவும் (சோகா இகேடா), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நந்தினியும், 100 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீஜாவும், 400 மீட்டர் ஓட்டத்தில் ரோஷினியும் (மூவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீரர் சதீஷ்குமாரும், குண்டு எறிதலில் லயோலா வீரர் நிர்மல் ராஜூம், 100 மீட்டர் ஓட்டத்தில் ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரி வீரர் நிதினும், 400 மீட்டர் ஓட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வீரர் ராஜேசும் முதலிடத்தை சொந்தமாக்கினார்கள்.

நேற்றைய பந்தயங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் முன்னிலை வகிக்கின்றன. இன்று கடைசி நாள் பந்தயங்கள் நடக்கிறது. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Next Story