பிற விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் + "||" + India continues to dominate the South Asian Games

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காத்மண்டு,

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது.

இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் (தமிழ்நாடு) 6-11, 9-11, 10-12, 11-7, 11-4, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து சக நாட்டு வீரர் ஹர்மீத் தேசாயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தோல்வி கண்ட ஹர்மீத் தேசாய் வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுதிர்தா முகர்ஜி 8-11, 11-8, 6-11, 11-4, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை அஹிகா முகர்ஜியை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.


பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சிரில் வர்மா 17-21, 23-21, 21-13 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த ஆர்யமான் தண்டனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-18, 25-23 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான காயத்ரி கோபிசந்தை சாய்த்து மகுடம் சூடினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா-கிருஷ்ண பிரசாத் ஜோடி 21-19, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் இலங்கையின் சச்சின் டியாஸ்-புவானிகா கோனதிலகே இணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-மேஹனா ஜக்கம்புடி கூட்டணிக்கும் தங்கப்பதக்கம் கிட்டியது.

தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் (20.03 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் கர்ஹனா (17.31 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை அபா காதுவா (15.32 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

வாள்சண்டை போட்டியில் பெண்களுக்கான பாய்ல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வாங்ஜெல்பாம் தோய்பி தேவி தங்கப்பதக்கமும், ராதிகா பிரசாத் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஆண்களுக்கான சபேர் பிரிவில் இந்திய வீரர்கள் கரண்சிங், குமரேசன் முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்கள். பளுதூக்குதலில் இந்திய வீரர் அசிந்தா ஷிவ்லி (73 கிலோ), இந்திய வீராங்கனைகள் ராஹி ஹால்டெர் (64 கிலோ), மன்பிரீத் கவுர் (71 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தனர்.

நேற்று ஒரேநாளில் இந்தியா 19 தங்கம், 18 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா மொத்தம் 165 பதக்கத்துடன் (81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண்கலம்) முதலிடத்தில் தொடருகிறது. நேபாளம் 116 பதக்கத்துடன் (41 தங்கம், 27 வெள்ளி, 48 வெண்கலம்) 2-வது இடத்தில் இருக்கிறது.