இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் பதவி காலத்தை நீடிக்கலாமா? - துளிகள்


இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் பதவி காலத்தை நீடிக்கலாமா?  - துளிகள்
x
தினத்தந்தி 10 Feb 2020 10:00 PM GMT (Updated: 10 Feb 2020 8:42 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் பதவி காலத்தை நீடிக்கலாமா? இந்திய கிரிக்கெட் வாரிய உயர் மட்ட கமிட்டி கூட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

* ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட பிறகு இந்திய அணியின் மானேஜர் அனில் பட்டேல் அளித்த ஒரு பேட்டியில், ‘தோல்வியால் எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தோம். இதனால் இறுதிப்போட்டியின் கடைசி கட்டத்தில் என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. ஐ.சி.சி. அதிகாரிகள் கடைசி கட்ட வீடியோ பதிவினை பார்க்க இருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பிறகு தான் என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியவரும். நடந்த சம்பவத்துக்கு ஐ.சி.சி. நடுவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். இந்த பிரச்சினையை ஐ.சி.சி. தீவிரமாக கவனத்தில் எடுத்து கொள்ளும்’ என்று தெரிவித்தார்.

* 1962-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் அங்கம் வகித்த பி.கே.பானர்ஜி (வயது 83) இருதயத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

* ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் அக்பர் அலியின் அக்கா கதிஜா காதுனுக்கு கடந்த 22-ந் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது அக்காவின் உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்த பிறகும் அவர் நாட்டு அணிக்காக தொடர்ந்து விளையாடிய துயர சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அக்பர் அலியின் தந்தை தெரிவித்து இருக்கிறார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய உயர் மட்ட கமிட்டி கூட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரியாக கடந்த ஒரு ஆண்டாக இருந்து வரும் முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் பதவி காலத்தை நீடிக்கலாமா? அல்லது புதிய நன்னடத்தை அதிகாரியை நியமிக்கலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அத்துடன் லோதா கமிட்டி சிபாரிசின் படி அமைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

* சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில், கடந்த ஆண்டின் (2019) வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் நடுகள வீரர் விவேக் சாகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* குழந்தை பெற்றதால் 2¼ ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் களம் திரும்பிய இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 4 மாதங்களில் தனது உடல் எடையில் 26 கிலோவினை குறைத்து இருக்கிறார். 89 கிலோவாக இருந்த அவரது உடல் எடை தற்போது 63 கிலோவாக குறைந்துள்ளது. தன்னுடைய புதிய புகைப்படங்களை சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்று நடந்த 79-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-ஜம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் (டிரா) முடிந்தது. நாளை இரவு 7.30 மணிக்கு கோவாவில் நடைபெறும் 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.

* ஒடிசாவில் உள்ள கேந்திரபாரா மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 18 வயதான பள்ளி மாணவர் சத்யஜித் பிரதான் ரன் எடுக்க ஓடுகையில் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

Next Story