20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம்: ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம்: ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 15 Feb 2020 11:07 PM GMT (Updated: 15 Feb 2020 11:07 PM GMT)

20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் தேசிய சாதனை படைத்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ராஞ்சி,

7-வது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 23 வயதான ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் 1 மணி 29 நிமிடம் 54 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கமும் வென்றார். அத்துடன் அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 1 மணி 30 நிமிடத்துக்குள் இலக்கை கடக்க வேண்டியது அவசியமானதாகும்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் டெல்லி வீராங்கனை சவும்யா 1 மணி 31 நிமிடம் 29 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அவரை பாவனா ஜாட் முந்தியுள்ளார்.

கொல்கத்தாவில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வரும் பாவனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேசிய ஓபன் தடகள போட்டியில் 1 மணி 38 நிமிடம் 30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய அவரது சிறந்த செயல்பாடாக இருந்தது.

17 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி 1 மணி 31 நிமிடம் 36 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் நூலிழையில் ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை இழந்தார். ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் சந்தீப்குமார் 1 மணி 21 நிமிடம் 34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அவர் 34 வினாடி வித்தியாசத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அதிர்ஷ்டத்தை கோட்டைவிட்டார்.

ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த பாவனா ஜாட் கூறுகையில் ‘ஒலிம்பிக் போட்டியில் கால்பதிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. பயிற்சியின் போது நான் ஏறக்குறைய 1 மணி 27 நிமிடத்துக்குள் பந்தய தூரத்தை கடந்து இருக்கிறேன். சூழ்நிலை சரியாக அமைந்தால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை எட்ட முடியும் என்பது எனக்கு தெரியும். கடந்த சில மாதங்களாக பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் படி கடுமையாக பயிற்சி மேற்கொண்டதன் பலனாக இந்த மாதிரியான திறமையை என்னால் வெளிப்படுத்த முடிந்தது.’ என்றார்.

Next Story