தென் மண்டல விளையாட்டு போட்டி: வருமான வரி அணி ‘சாம்பியன்’


தென் மண்டல விளையாட்டு போட்டி: வருமான வரி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 3 March 2020 11:26 PM GMT (Updated: 3 March 2020 11:26 PM GMT)

தென் மண்டல விளையாட்டு போட்டியில், வருமான வரி அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

வருமான வரித்துறை சார்பில், மத்திய வருவாய் துறையினருக்கான 52-வது தென் மண்டல விளையாட்டு போட்டி சென்னையில் பல்வேறு மைதானங்களில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் தடகளம், கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, கபடி உள்பட 17 போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வருமான வரி, ஜி.எஸ்.டி. மற்றும் கலால்வரி, சுங்க வரி அலுவலர்கள் 840 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வருமான வரி (தமிழ்நாடு) அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜி.எஸ்.டி. (ஆந்திரா) அணி 2-வது இடம் பெற்றது. இதன் கபடி இறுதிப்போட்டியில் வருமான வரி அணி (தமிழ்நாடு) 40-15 என்ற புள்ளி கணக்கில் ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க இலாகா (கர்நாடகா) அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கால்பந்து இறுதிப்போட்டியில் வருமான வரி அணி (தமிழ்நாடு) 1-0 என்ற கோல் கணக்கில் சுங்க இலாகா (கேரளா) அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. கைப்பந்து இறுதிப்போட்டியில் வருமான வரி அணி (தமிழ்நாடு) 25-21, 25-20, 27-25 என்ற நேர்செட்டில் சுங்க இலாகா (கேரளா) அணியை சாய்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கூடைப்பந்து இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வருமான வரி அணி 62-52 என்ற புள்ளி கணக்கில் ஜி.எஸ்.டி. (ஆந்திரா) அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் வருமான வரி தலைமை இயக்குனர் (புலனாய்வு) தினேஷ் சி.பட்வாரி, வருமான வரி தலைமை கமிஷனர் அர்விந்த் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள். வருமான வரி கமிஷனர் (நிர்வாகம்) என்.ரங்கராஜ், வருமான வரி கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) ஆர். இளவரசி, வருமான வரி விளையாட்டு அதிகாரி பி.பாலச்சந்திரன், துரோணாச்சார்யா விருது பெற்ற ஏ.சீனிவாச ராவ் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story