ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டையில் அபாரம்: பூஜாராணி, விகாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டையில் அபாரம்: பூஜாராணி, விகாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 9 March 2020 12:28 AM GMT (Updated: 9 March 2020 12:28 AM GMT)

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டையில், பூஜாராணி, விகாஸ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

அம்மான்,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் செவோன்ரெட்ஸ் ஒகாஜாவாவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான விகாஸ் கிருஷ்ணன் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3-வது முறையாக பங்கேற்க இருக்கிறார்.

பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான இந்தியாவின் பூஜா ராணி 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் போர்னிபா சுட்டியை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியதோடு, முதல்முறையாக ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தார். 81 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் குமார் 2-3 என்ற கணக்கில் சீனாவின் டாக்சியாங் சென்னிடம் தோல்வியை தழுவினார்.

29 வயதான பூஜா ராணி கூறுகையில், ‘போர்னிபாவை இதற்கு முன்பு நான் சந்தித்தது இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவரை நினைத்து எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. பிறகு எனது பயிற்சியாளர்கள் எனக்கு ஆலோசனை வழங்கி நம்பிக்கை அளித்தனர். இப்போது வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். பூஜா ராணி அடுத்து உலக சாம்பியனான லீ குயானை (சீனா) எதிர்கொள்கிறார்.

இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில்(69 கிலோ) இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், உஸ்பெகிஸ்தானின் மாப்டுனாகோன் மெலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.


Next Story