அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி 3 வாரத்தில் முடிவு


அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி 3 வாரத்தில் முடிவு
x
தினத்தந்தி 29 March 2020 12:29 AM GMT (Updated: 29 March 2020 12:29 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதியதேதி இன்னும் 3 வாரத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது.

டோக்கியோ, 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதுடன், சர்வதேச விளையாட்டு போட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) அனைத்து சர்வதேச விளையாட்டு சம்மேளன நிர்வாகிகளுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் தீவிர ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்க தகுதி படைத்தவர்கள் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனை அனைத்து சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் வீரர்கள் தகுதி பெறுவதற்கான போட்டிகளை சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதியை முடிவு செய்ய சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் போட்டியுடன் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் இணைந்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. போட்டிக்கான புதியதேதி குறித்து இன்னும் 3 வாரத்தில் முடிவு செய்யப் படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விஷயத்தில் பல அம்சங்களை கருத்தில் கொண்டு தான் இறுதி முடிவு எடுக்க முடியும். அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் போட்டி நடைபெறும் என்று நம்புகிறோம். ஏற்கனவே இந்த போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அடுத்த ஆண்டில் நேரடியாக களம் காண முடியும்‘ என்றார்.

இதற்கிடையில் உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ அளித்த ஒரு பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி எல்லோரையும் திருப்திபடுத்தி விடாது. ஏனெனில் எல்லா விளையாட்டுகளுக்கும் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட சில காலங்களில் சவால்கள் அதிகம் இருக்கும். எனவே எல்லா விளையாட்டு அமைப்புகளுக்கும் தகுந்த மாதிரி ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது இயலாத காரியம். அடுத்த 2 ஆண்டுகளில் எல்லா விளையாட்டு அமைப்புகளும், ஒலிம்பிக் போட்டிக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். அதேநேரத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான தேதி குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த போட்டிக்காக விளையாட்டு சம்மேளனங்களும், வீரர்களும் தங்கள் திட்டங் களை தெளிவாக வகுக்க முடியும்‘ என்று தெரிவித்துள்ளார்.

Next Story