உலக போட்டி உரிமம் ரத்து விவகாரம்: இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீது புதிய குற்றச்சாட்டு


உலக போட்டி உரிமம் ரத்து விவகாரம்: இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீது புதிய குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 April 2020 11:15 PM GMT (Updated: 30 April 2020 7:26 PM GMT)

உலக போட்டி உரிமம் ரத்து விவகாரத்தில், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் அடுத்த ஆண்டு (2021) உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு வழங்கி இருந்த உரிமத்தை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ரத்து செய்ததுடன், அந்த போட்டியை நடத்தும் உரிமையை செர்பியாவுக்கு வழங்கியது. அத்துடன் இந்த போட்டி உரிமத்துக்கான கட்டணத்தை (ரூ.30 கோடி) கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதிக்குள் செலுத்த தவறிய இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு ரூ.3¾ கோடியை அபராதமாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விதித்துள்ளது. செர்பியாவில் உள்ள சர்வதேச குத்துச்சண்டை சங்க வங்கி கணக்குக்கு, இந்தியாவில் உள்ள வங்கியில் இருந்து பணபரிமாற்றம் செய்வதில் உள்ள பிரச்சினையை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தீர்த்து வைக்காமல், போட்டிக்கான உரிமத்தை ரத்து செய்து இருப்பது அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிப்பதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அபய்சிங் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது.

இது குறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டெல்லியில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இன்னும் கட்டவில்லை. போட்டி முடிந்து 18 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பாக்கி தொகை எங்களுக்கு வரவில்லை. செர்பியாவில் உள்ள எங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. பாக்கி தொகை குறித்து இத்தனை காலம் பொறுமை காத்தும், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் எங்களுக்கு அளித்த உத்தரவாதத்தின் படி நடந்து கொள்ளவில்லை. எனவே மேலும் நிதி இழப்பை சந்திக்க வேண்டாம் என்று கருதியே இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு வழங்கிய போட்டி உரிமத்தை ரத்து செய்தோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story