பிற விளையாட்டு

2021-ம் ஆண்டிலும் நடக்காவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் - ஐ.ஓ.சி. தலைவர் பேட்டி + "||" + Olympic Games canceled if not held by 2021 - IOC Interview with the Chairman

2021-ம் ஆண்டிலும் நடக்காவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் - ஐ.ஓ.சி. தலைவர் பேட்டி

2021-ம் ஆண்டிலும் நடக்காவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் - ஐ.ஓ.சி. தலைவர் பேட்டி
2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாவிட்டால் ரத்து செய்யப்படும் என்று ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.
ஷூரிச், 

32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், ஒலிம்பிக் போட்டிக்கும் வேட்டு வைத்தது.

கொரோனா தாக்கத்தால் உருவாகியுள்ள அசாத்தியமான சூழ்நிலை காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்க உள்ளது. ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போனதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐ.ஓ.சி.) ரூ.6 ஆயிரம் கோடி வரை கூடுதல் செலவு ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது சிக்கல் தான்.

இந்த நிலையில் ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பேச் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2021-ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மறுபடியும் தள்ளிவைக்கப்படாது. போட்டியை ரத்து செய்து விடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். இதை ஜப்பான் பிரதமரிடமும் முன்பே தெரியப்படுத்தி உள்ளோம். ஏனெனில் ஒலிம்பிக் பணிகளை கவனிக்கும் ஒருங்கிணைப்பு கமிட்டியில் உள்ள 3 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் ஊழியர்களை நாம் காலம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு இருக்க முடியாது.

இதே போல் ஒலிம்பிக் போட்டிக்காக ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளின் அட்டவணைகளை ஒவ்வொரு முறையும் மாற்றி அமைப்பது சாத்தியமில்லை. வீரர்களையும் நிலையற்ற தன்மையுடன் காத்திருக்க வைக்க முடியாது. இதை எல்லாம் நாங்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம்.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உணரச் செய்வது என்பதே எங்களது பிரதான நோக்கம். இன்னும் ஒரு ஆண்டும் 2 மாதமும் இருக்கிறது. என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை சார்ந்து இருக்கிறோம். எந்த முடிவு என்றாலும் அதற்குரிய நேரம் வரும் போது எடுக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்வேறு அம்சங்களை பார்க்க வேண்டி உள்ளது. மருத்துவ முன்எச்சரிக்கை நடவடிக்கை, தேவைப்பட்டால் வீரர், வீராங்கனைகளை 2 வாரம் தனிமைப்படுத்துவது போன்ற வித்தியாசமான சூழலுக்கு ஏற்ப தயாராக வேண்டி இருக்கிறது. ஒலிம்பிக் மறு ஏற்பாடு என்பது மிகப்பெரிய கடினமான பணியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...