ரியாலிட்டி ஷோவால் தற்கொலை செய்து கொண்ட ஜப்பான் வீராங்கனை


ரியாலிட்டி ஷோவால் தற்கொலை செய்து கொண்ட ஜப்பான் வீராங்கனை
x
தினத்தந்தி 27 May 2020 8:18 AM GMT (Updated: 27 May 2020 8:18 AM GMT)

”பலமான வீராங்கனை, பலவீனமான மனம்” ரியாலிட்டி ஷோவால் தற்கொலை செய்து கொண்ட ஜப்பான் வீராங்கனை

டோக்கியோ

ஜப்பானை சேர்ந்த ஹனா கிமுராவின் தாய் க்யோகோ கிமுரா பிரபல ரெஸ்லிங் வீராங்கனை ஆவார். அவரைத் தொடர்ந்து ரெஸ்லிங் உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார் ஹனா கிமுரா. ஸ்டார்டம் ரெஸ்லிங் என்ற நிறுவனத்தில் இணைந்து ஜப்பான் புரோ ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

விரைவில் ஜப்பானில் பிரபலமான ரெஸ்லிங் வீராங்கனையாக மாறினார். அடுத்து அவர் உலகின் மிகப் பெரிய புரோ ரெஸ்லிங் நிறுவனத்தில் சேர்ந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது தான் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். 

டெரெஸ் ஹவுஸ் என்ற அந்த நிகழ்ச்சியில் ஜப்பான் கலாச்சாரத்தை சேர்ந்த ஆறு பிரபலங்கள் ஒரே வீட்டில் வாழ வேண்டும். கிட்டத்தட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் அவர் கடும் எதிர்ப்பை சந்திக்கத் துவங்கினார். 

அதற்கு முக்கிய காரணம், அதுவரை ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்ட ஹனா கிமுராவை  அந்த நிகழ்ச்சியில் காணவில்லை. அந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகளை இணையவாசிகள் பலர் விமர்சிக்கத் துவங்கினர். அதனால், ஹனா கிமுரா மன உளைச்சலுக்கு ஆளானார். 

22 வயதே ஆன இளம் பெண்ணான ஹனா கிமுராவால் இணைய உலகின் விமர்சனத்தை எளிதாக கடந்து போக முடியவில்லை. அதனால், தற்கொலை முடிவை எடுத்தார்.  அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில் தன் பூனையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். மகிழ்ச்சியாக இரு. என்னை மன்னித்து விடு" என எழுதி உள்ளார். 

அடுத்து தன் கடைசி டுவிட்டர் பதிவில் தினமும் 100 வெளிப்படையான கருத்துக்கள் வருகின்றன  நான் காயமடைந்து விட்டேன் என்பதை என்னால் மறுக்க முடியவில்லை. நான் இறந்தே விட்டேன். எனக்கு ஒரு அம்மாவை கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

நான் என் வாழ்க்கையில் விரும்பப்பட வேண்டும் என நினைத்தேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் என் நன்றி. நான் பலவீனமாக இருக்கிறேன். மன்னித்து விடுங்கள் என கூறி உள்ளார். 

எத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் கூட அவர்கள் இணையவாசிகளின் விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்ற உண்மையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டி உள்ளது. 


Next Story