விளையாட்டு துளிகள்...


விளையாட்டு துளிகள்...
x
தினத்தந்தி 21 July 2020 9:45 PM GMT (Updated: 21 July 2020 8:10 PM GMT)

பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் நியூசிலாந்து மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 3 அணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலங்கையில் நடக்க இருந்த தகுதி சுற்று போட்டி கொரோனா பரவலால் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து போட்டியை நடத்தும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கிரேக் பார்சிலாய் கருத்து தெரிவிக்கையில், ‘பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி குறித்து அடுத்த 2 வாரத்தில் முடிவு செய்யப்படும். இந்த போட்டியை தள்ளிவைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறோம்’ என்றார்.

* வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்து 2-வது போட்டிக்காக மான்செஸ்டருக்கு செல்லுகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு சென்று திரும்பியது சர்ச்சையாக வெடித்தது. இந்த போட்டி தொடரில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் உயிர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறிய ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், 5 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டு 2 முறை கொரோனா பரிசோதனை செய்து அதில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தால் தான் அணியினருடன் இணைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்ச்சருக்கு கடந்த 5 நாட்களில் 2 முறை நடத்தப்பட்ட சோதனையில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்ததால் அவர் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பிரான்ஸ் கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு ‘பாலோன் டி ஆர்‘ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாலும் இந்த ஆண்டுக்கான இந்த கால்பந்து விருது வழங்கும் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்து வீரர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழா பின்னர் உலகளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கவுரவமிக்க இந்த விருது வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.

* இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் போது இந்திய அணி வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என்பது அதிகமானதாகும். இதனை சற்று குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி அளித்த ஒரு பேட்டியில், ‘வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையாகும். அதனை இந்திய கிரிக்கெட் அணியும் கடைப்பிடித்தாக வேண்டும். அதேநேரத்தில் தனிமைப்படுத்துதல் காலத்திலும் பயிற்சி பெறும் வகையில் இந்திய அணியினருக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படும். அடிலெய்டு மைதானத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்துதலுக்கு தேவையான வசதிகள் உள்ளது’ என்றார்.

* லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திலோ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது இரண்டையும் சேர்த்தோ தொடர்ந்து 6 ஆண்டுகள் ஒருவர் பதவியில் இருந்தால் அதன் பிறகு ஒரு தடவை இடைவெளிவிட்டு தான் மீண்டும் பதவிக்கு வர வேண்டும். தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ள சவுரவ் கங்குலி, செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஆகியோர் அந்த பொறுப்புக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் அவர்கள் ஏற்கனவே முறையே பெங்கால் மற்றும் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகித்திருப்பதால் இதன் அடிப்படையில் பார்த்தால் இவர்கள் இந்த மாதத்திற்குள் தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டியது இருக்கும். எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் வகையில் இந்த விதிமுறையில் சில திருத்தங்கள் செய்வதற்கு அனுமதி கோரி கிரிக்கெட் வாரியம் சார்பில் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Next Story