இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா - கேல் ரத்னா விருது


இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா - கேல் ரத்னா விருது
x
தினத்தந்தி 23 Aug 2020 12:05 AM GMT (Updated: 23 Aug 2020 12:05 AM GMT)

மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த தேசிய விருதுக்கு தேர்வாகி இருக்கும் 3 பேருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

துளிகள்

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் சிலவற்றில் கேப்டன் பொறுப்பை வகித்தவருமான கேம்ரூன் ஒயிட் 2018-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த நிலையில் 37 வயதான கேம்ரூன் ஒயிட் அனைத்து வகையிலான தொழில்முறை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளர். அடுத்து பயிற்சியாளராக பணியாற்ற முயற்சி செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒயிட் 4 டெஸ்ட், 91 ஒருநாள் மற்றும் 47 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

* இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ‘கேல் ரத்னா’ விருதுக்கும், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ‘அர்ஜூனா’ விருதுக்கும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ‘அர்ஜூனா’ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த தேசிய விருதுக்கு தேர்வாகி இருக்கும் 3 பேருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக உயரிய கேல் ரத்னா விருதை பெறும் 4-வது கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மாவுக்கு தெரிவித்து இருக்கும் வாழ்த்து செய்தியில், ‘ஹிட்மேன், நாங்கள் உங்களால் பெருமை அடைகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தனது விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக டுவிட்டர் மூலம் நேற்று அறிவித்துள்ளார். ரசிகர்களின் ஆதரவால் தான் இந்த விருது சாத்தியமானது என்றும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். இந்த பயணத்தின் போது டோனிக்கு விமானத்தில் சிறப்பு வசதி கொண்ட (பிசினஸ் கிளாஸ்) இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால் டோனி அந்த இருக்கையில் அமராமல் தன்னுடன் பயணம் செய்த அணியின் இயக்குனர் ஜார்ஜ் ஜானுக்கு அந்த இருக்கையை அளித்து விட்டு சாதாரண பிரிவு (எக்கனாமிக் கிளாஸ்) இருக்கையில் அமர்ந்து பயணித்து இருக்கிறார். சாதாரண பிரிவு இருக்கையில் ஜார்ஜ் ஜான் காலை மடக்கி இருக்க சிரமப்பட்டதை பார்த்த டோனி தனது இருக்கையை அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த தகவலை ஜார்ஜ் ஜான் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

* 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்குக்கு அந்த ஆண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ‘அர்ஜூனா’ விருதுக்கு சாக்‌ஷி மாலிக்கின் பெயர் தேர்வு கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே மிக உயரிய கேல் ரத்னா விருதை பெற்று இருப்பதால் விருது பட்டியலில் இருந்து அவரது பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் கடைசி கட்டத்தில் நீக்கியது. இதனால் அதிருப்தியும், விரக்தியும் அடைந்து இருக்கும் சாக்‌ஷி மாலிக் பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கு டுவிட்டரில் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘கேல் ரத்னா விருது எனக்கு வழங்கப்பட்டதால் பெருமிதம் அடைந்தேன். எல்லா விளையாட்டு வீராங்கனைகளையும் போல் எல்லா விருதுகளையும் வெல்ல வேண்டும் என்ற கனவு எனக்கும் இருக்கிறது. அர்ஜூனா விருதை பெற நான் மேலும் நாட்டுக்கு எத்தனை பதக்கங்கள் வென்று கொடுக்க வேண்டும். மல்யுத்த வாழ்க்கையில் அர்ஜூனா விருது பெற எனக்கு ஒருபோதும் அதிர்ஷ்டம் இல்லையா?‘ என்று கூறியுள்ளார்.

* போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி)-பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ் ) அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 2, 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

*இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அளித்த ஒரு பேட்டியில், ‘எல்லோருடைய பாதுகாப்பும் மிகவும் முக்கியமானதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கொரோனா பிரச்சினை எதுவுமின்றி வெற்றிகரமாக நடந்தால் மற்ற விளையாட்டு அமைப்புகளும் பாதுகாப்புடன் விளையாட்டு போட்டிகளை நடத்த முன்வருவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது டுவிட்டர் பதிவில், ‘சமீப காலத்தில் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய இந்திய அணி வீரர்கள் பங்கேற்கும் நல நிதி மற்றும் வழியனுப்பு போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும்’ என்று யோசனை தெரிவித்துள்ளார்.


Next Story