தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா; ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் இன்று நடக்கிறது


தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா; ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 29 Aug 2020 12:44 AM GMT (Updated: 29 Aug 2020 12:44 AM GMT)

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா இன்று முதல்முறையாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்கிறது.

புதுடெல்லி,

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக மாற்றுத் திறனாளி வீரர் மாரியப்பன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகிய 5 பேரும், அர்ஜூனா விருதுக்கு இஷாந்த் ஷர்மா (கிரிக்கெட்), அதானு தாஸ் (வில்வித்தை), டுட்டீ சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி (பேட்மிண்டன்) உள்பட 27 பேரும், துரோணாச்சார்யா விருதுக்கு 13 பேரும், தயான்சந்த் விருதுக்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தத்தில் தேசிய விளையாட்டு விருதுக்கு 7 பிரிவுகளில் 74 பேர் தேர்வானார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக அரங்கேறும் இந்த விழா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது. இதன்படி தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார். விருது பெறுபவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தால் (சாய்) டெல்லி, புனே, சண்டிகார், பெங்களூரு உள்பட 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் உள்ள வீடியோகான்பரன்ஸ் வசதி மூலமாக விழாவில் இணைகிறார்கள். விருது பெறுபவரின் பெயர் வாசிக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர் இருக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும் என்றும் பாராட்டு பட்டயத்தை ஜனாதிபதி காண்பிக்கும் வீடியோ மையத்தில் உள்ள திரையில் காட்டப்பட்டதும், விருது பெறும் நபர் ஏற்கனவே தனக்கு அருகில் வைக்கப்பட்டு இருக்கும் விருது சின்னத்தை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதுடன், நிகழ்ச்சியின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒத்திகையும் செய்து காட்டப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்று இருப்பதால் ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும், கொரோனா பாதிப்பு காரணமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பேட்மிண்டன் வீரர் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி உள்ளிட்ட 4 பேரும், உடல் நல பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களினால் மேலும் 4 பேரும் என மொத்தம் 10 பேர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. மற்றவர்கள் விருதை பெறுகிறார்கள். நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story