பிற விளையாட்டு

காணொலி வாயிலாக நடந்த விழா: தமிழக வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார் + "||" + Video Ceremony: President presents Khel Ratna Award to Tamil Nadu player Mariappan

காணொலி வாயிலாக நடந்த விழா: தமிழக வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்

காணொலி வாயிலாக நடந்த விழா: தமிழக வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்
முதல்முறையாக காணொலி வாயிலாக நடந்த தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு தமிழக வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார்.
புதுடெல்லி,

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலக்கும் இந்திய வீரர், வீராங்கனைகள், அவர்களின் திறமையை பட்டை தீட்டும் பயிற்சியாளர்கள், விளையாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தேசிய விளையாட்டு தினத்தன்று (ஆக்கி ஜாம்பவான் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதி ) வழங்கப்படுவது வாடிக்கையாகும்.


இந்த ஆண்டுக்கான மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகிய 5 பேரும், அர்ஜூனா விருதுக்கு இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா (இருவரும் கிரிக்கெட்), டுட்டீ சந்த் (தடகளம்), மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி (பேட்மிண்டன்), திவிஜ் சரண் (டென்னிஸ்) உள்பட 27 பேரும், சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதுக்கு ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்) உள்பட 13 பேரும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த பாரா தடகள பயிற்சியாளர் ரஞ்சித் குமார் உள்பட 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தத்தில் தேசிய விளையாட்டு விருதுக்கு 7 பிரிவுகளில் 74 பேர் தேர்வானார்கள்.

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெறும் இந்த விழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) வாயிலாக அரங்கேறியது. விழாவில் காணொலி காட்சி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணொலி வாயிலாக நடந்த இந்த விழாவில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இருந்தும், விருது பெறுபவர்கள் டெல்லி, புனே, பெங்களூரு உள்பட 11 இடங்களில் இந்திய விளையாட்டு ஆணையத்தால் (சாய்) அமைக்கப்பட்டிருந்த காணொலி வசதிகள் கொண்ட மையங்கள் மூலமாகவும் பங்கேற்றனர்.

விருது பெறுபவர்களின் பெயர்களை ஜனாதிபதி மாளிகையில் இருந்து அதிகாரி ஒருவர் அறிவித்ததுடன், அவரது சாதனைகள் குறித்த புள்ளிவிவரத்தையும் படித்தார். அப்போது விருது பெறும் நபர் தான் இருக்கும் மையத்தின் இருக்கையில் எழுந்து நின்றார். அவரை பற்றிய சாதனைகள் வாசிக்கப்பட்டதும், ஜனாதிபதி கைதட்டி பாராட்டினார். விருது பெறுபவர் அதனை தலைவணங்கி ஏற்றுக்கொண்டு காணொலியில் இருந்து விடைபெற்றார்.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்று இருப்பதால் ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும், கொரோனா பாதிப்பு காரணமாக வினேஷ் போகத், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி உள்பட 4 பேரும், துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வாகி விழா ஒத்திகையின் போது தடகள பயிற்சியாளர் புருஷோத்தம் ராய் (வயது 79) நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாலும் மற்றும் பல்வேறு காரணங்களினால் 7 பேரும் என மொத்தம் 14 பேர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. எஞ்சிய 60 பேர் விருதை பெற்றுக் கொண்டனர்.