பிற விளையாட்டு

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி: டென்மார்க்கில் அடுத்த மாதம் தொடக்கம் + "||" + Thomas and Uber Cup Badminton Tournament: Starting next month in Denmark

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி: டென்மார்க்கில் அடுத்த மாதம் தொடக்கம்

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி: டென்மார்க்கில் அடுத்த மாதம் தொடக்கம்
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

* தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. தனிப்பட்ட பணி காரணமாக இந்த போட்டிக்கான இந்திய அணியில் வீராங்கனை பி.வி.சிந்து இடம் பெறமாட்டார் என்று அவரது தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் தங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த போட்டியில் விளையாட சிந்து சம்மதம் தெரிவித்து இருப்பதாக இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.12½ கோடிக்கு வாங்கப்பட்டுள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது தந்தையை கவனிக்க வசதியாக கடந்த மாதத்தில் நியூசிலாந்துக்கு சென்றார். நியூசிலாந்துக்கு செல்லும் வெளிநாட்டினர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று விதிமுறை இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் தற்போது தான் அவரது தந்தையை சந்தித்துள்ளார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. எனவே அவர் ஐ.பி.எல். போட்டியில் முதல் பாதி ஆட்டங்களை தவறவிடலாம் என்று கூறப்படுகிறது. இது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையலாம்.

* இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பயிற்சியாளருக்கான டிப்ளமோ படிப்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயிற்சியாளர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற துடுப்பு படகு வீரர் பஜ்ரங்லால் தாக்கர், ஆக்கி வீராங்கனை பூனம் ராணி உள்பட 33 வீரர், வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனர்.