விளையாட்டு துளிகள்....


விளையாட்டு துளிகள்....
x
தினத்தந்தி 9 Oct 2020 10:32 PM GMT (Updated: 9 Oct 2020 10:32 PM GMT)

டோக்கியோ மாரத்தான் பந்தயம் அடுத்த ஆண்டு (2021) மார்ச் 7-ந் தேதி ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர் அஜய் ஜெயராம் பெங்களூருவில் இருந்து நேற்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான மூலம் டென்மார்க் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரிடம் உள்ள விசா பயணிக்க போதுமான தரம் வாய்ந்தது கிடையாது என்று கூறி விமான நிறுவனம் அவர் பயணம் செய்ய அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இந்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அஜய் ஜெயராம் தான் டென்மார்க் செல்ல மத்திய அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆனால் இதே விசாவை வைத்து தான் சக வீரர்கள் டெல்லியில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* டோக்கியோ மாரத்தான் பந்தயம் அடுத்த ஆண்டு (2021) மார்ச் 7-ந் தேதி ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த பந்தயத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அதிகமானவர்கள் கூடுவதால் கொரோனா கட்டுப்பாடு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டி அக்டோபர் 17-ந் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* ஐ.பி.எல். தொடருக்கு மத்தியில் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை சார்ஜாவில் நடக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 3 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதையொட்டி வருகிற 13-ந் தேதி மும்பையில் கூடுமாறு இந்திய வீராங்கனைகளுக்கு, கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்து இருக்கிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆடிய வீராங்கனைகள் 30 முதல் 36 பேர் வரை மும்பைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியிருந்து கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இதன் பிறகு வருகிற 22-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவார்கள் என்று தெரிகிறது. அங்கு 6 நாள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து விட்டு பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

*இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா இந்திய அணிக்குள் நுழைந்து 10 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்தார். 2010-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆன புஜாரா இதுவரை 77 டெஸ்டில் விளையாடி 18 சதங்கள் உள்பட 5,840 ரன்கள் சேர்த்துள்ளார். ரசிகர்களுக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள 32 வயதான புஜாரா, இது தான் தனது மனைவியின் பிறந்த நாள் என்பதால் இந்த தேதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டார்.

Next Story