உலக பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி


உலக பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி
x
தினத்தந்தி 28 Jan 2021 1:02 AM GMT (Updated: 28 Jan 2021 1:02 AM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வியை சந்தித்தனர்.

பாங்காக்,

தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களுக்குள் இருப்பவர்கள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். இதன் பெண்கள் ஒற்றையரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங்கை சந்தித்தார். 59 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு பிறகு கைப்பற்றிய (21-19) சிந்து அடுத்த 2 செட்களையும் 12-21, 17-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியை சந்தித்தார். இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சிந்து, தாய்லாந்து வீராங்கனையான முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் அன்டர்ஸ் ஆன்டோன்செனிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 17 நிமிடம் நீடித்தது. அடுத்த லீக் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், சீன தைபேயின் வாங் ஜூ வெய்யுடன் மோதுகிறார்.

Next Story