இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அன்ஷூ, சோனம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அன்ஷூ, சோனம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 11 April 2021 3:40 AM GMT (Updated: 11 April 2021 3:40 AM GMT)

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அன்ஷூ, சோனம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அல்மாதி, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல மல்யுத்த சாம்பியன்ஷிப் கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினார். இறுதிப்போட்டி வரை அவர் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

தொடக்க சுற்றில் தென்கொரியாவின் ஜியென் உம்மை வீழ்த்திய அவர் அடுத்த பந்தயத்தில் கஜகஸ்தானின் எம்மா திசினாவையும், அரைஇறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஷோகிடா அக்மெடோவாவையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அரியானாவை சேர்ந்த 19 வயதான அன்ஷூ மாலிக் உலக ஜூனியர் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.

இதேபோல் 62 கிலோ பிரிவின் அரைஇறுதியில் 18 வயதான இந்திய வீராங்கனை சோனம் மாலிக் 0-6 என்ற கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகளை குவித்து கஜகஸ்தான் வீராங்கனை அயாலிம் காசிமோவாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தார். இதனால் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி மூலம் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ) தகுதி பெற்று இருந்தார். சோனம் மாலிக் தகுதியின் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் ஒலிம்பிக் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

Next Story