மில்கா சிங் குறித்து மகன் உருக்கம்


மில்கா சிங் குறித்து மகன் உருக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:01 PM GMT (Updated: 21 Jun 2021 9:01 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மில்கா சிங்கின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் சண்டிகாரில் தகனம் செய்யப்பட்டது.

சண்டிகார், 

மின்னல் வேக ஓட்டத்தின் மூலம் பறக்கும் சீக்கியர் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட இந்திய முன்னாள் தடகள ஜாம்பவானான மில்கா சிங் (வயது 91) கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது மனைவி நிர்மல் கவுர் அதற்கு 6 நாட்களுக்கு முன்பு காலமானார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மில்கா சிங்கின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் சண்டிகாரில் தகனம் செய்யப்பட்டது. மில்கா சிங் குறித்து அவரது மகனும், கோல்ப் வீரருமான 49 வயது ஜீவ் மில்கா சிங் உருக்கமாக அளித்த ஒரு பேட்டியில், ‘எனது தந்தை எனக்கு தந்தையாக மட்டுமின்றி எல்லாமுமாக இருந்தார். அவர் எனக்கு சிறந்த நண்பர். என்னுடைய வழிகாட்டி, ஆலோசகர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் மனவலிமை என்னிடம் இருப்பதாக நம்புகிறேன். இந்த இழப்பை தாங்கும் மனவலிமை எனக்கு வாழ்நாள் முழுவதும் தேவையானதாகும். எனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் எனக்கு அதிகம் நினைவில்லை. ஆனால் ராணுவ வீரர்கள் ஒரு வேனில் வந்து இறங்கி எனது தந்தைக்கு இறுதி வணக்கம் செலுத்தியதை ஒருபோதும் மறக்கமாட்டேன். ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடினமான தருணத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்து, ஆறுதல் செய்திகளை அனுப்பிய எனது தந்தையின் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறினார்.

Next Story