ஒலிம்பிக் போட்டிக்கான அகதிகள் அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு


ஒலிம்பிக் போட்டிக்கான அகதிகள் அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 7:55 PM GMT (Updated: 14 July 2021 7:55 PM GMT)

ஒலிம்பிக் போட்டிக்கான அகதிகள் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தோகா,

உள்நாட்டு போர், கலவரம், அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு காரணங்களால் தங்கள் நாட்டை விட்டு தப்பி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களில் இருந்து ஒரு அணியை தேர்வு செய்து அவர்களுக்கு தங்கள் செலவில் பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த (2016) ஒலிம்பிக்கில் இருந்து ஏற்பாடு செய்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அகதிகள் அணியில் 29 வீரர்கள், 11 அதிகாரிகள் இடம் பிடித்துள்ளனர். இதில் 26 வீரர்கள் மற்றும் 11 அதிகாரிகள் கத்தார் தலைநகர் தோகாவில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேற்று டோக்கியோ புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர். முன்னதாக அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அணியின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அணியின் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்த அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அணியில் மற்ற யாருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து சில நாட்கள் தோகாவில் பயிற்சியில் ஈடுபட்டு விட்டு டோக்கியோ செல்வார்கள் என்றும் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story