2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும் - சர்வதேச கமிட்டி அறிவிப்பு


2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும் - சர்வதேச கமிட்டி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 4:22 AM GMT (Updated: 22 July 2021 4:22 AM GMT)

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

டோக்கியோ,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது. அடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகள் முறையே 2024-ம் ஆண்டு பாரீஸ்சிலும் (பிரான்ஸ்), 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலும் (அமெரிக்கா) நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2032-ம் ஆண்டுக்கான 35-வது ஒலிம்பிக் போட்டியை நடத்துவது யார்? என்பது குறித்து முடிவு செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்கள் கூட்டம் டோக்கியோவில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்த அந்த நாட்டு ஒலிம்பிக் சங்கம் ஏற்கனவே உரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. கத்தார், இந்தோனேஷியா, ஜெர்மனி, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளும் இந்த போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தாலும் புதிய தேர்வு விதிமுறைப்படி முதல் கட்ட பேச்சுவார்த்தையிலேயே அந்த நாடுகள் கழற்றி விடப்பட்டன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழுவின் பரிந்துரையின்படி இறுதி சுற்றுக்கான போட்டியில் பிரிஸ்பேன் மட்டுமே இருந்தது.

ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்த செயல் திட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வீடியோ மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் விளக்கினார். இதே போல் பிரிஸ்பேன் மேயர் மற்றும் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தங்களது திட்ட அறிக்கையை விவரித்தனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 77 உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 72 வாக்குகள் பிரிஸ்பேனுக்கு ஆதரவாக விழுந்தன. 5 ஓட்டுகள் எதிராக பதிவாகின. 3 பேர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் ஒலிம்பிக் கமிட்டியினரின் முழுமையான ஆதரவை பெற்ற பிரிஸ்பேன் 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றது. இதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை வரவேற்கும் விதமாக பிரிஸ்பேன் நகர மக்கள் திரண்டு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை ஆஸ்திரேலியா பெறுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே அந்த நாட்டில் 1956-ம் ஆண்டு மெல்போர்னிலும், 2000-ம் ஆண்டு சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டி அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story