பேட்மிண்டனில் சிந்து கால்இறுதிக்கு தகுதி குத்துச்சண்டையில் சதீஷ்குமார் அசத்தல்


பேட்மிண்டனில் சிந்து கால்இறுதிக்கு தகுதி குத்துச்சண்டையில் சதீஷ்குமார் அசத்தல்
x
தினத்தந்தி 29 July 2021 9:28 PM GMT (Updated: 29 July 2021 9:28 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார். குத்துச்சண்டையில் இந்திய வீரர் சதீஷ்குமார் கால்இறுதிக்குள் நுழைந்து அசத்தினார்.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க படிக்கட்டை நோக்கி பயணித்து மனநிறைவை அளித்தனர்.

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மியா பிளிக்பெல்ட்டை (டென்மார்க்) சந்தித்தார்.

41 நிமிடம் நடந்த இந்த மோதலில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்டில் பிளிக்பெல்ட்டை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இந்த தொடரில் இதுவரை ஒரு செட்டை இழக்காமல் வீறுநடை போடும் சிந்து கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், தற்போது 5-வது இடம் வகிப்பவருமான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) இன்று எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் 11-ல் சிந்துவும், 7-ல் யமாகுச்சியும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் யமாகுச்சியே வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்வித்தையில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் 6-4 என்ற கணக்கில் சீன தைபேயின் யு செங் டெங்கை தோற்கடித்தார். பின்னர் 2-வது சுற்றில் அதானு தாஸ், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான தென்கொரியாவின் ஓ ஜின் ஹைக்கை சந்தித்தார். திரிலிங்கான இந்த சுற்றில் வழக்கமான 5 செட் முடிவில் இருவரும் 5-5 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தனர்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த டைபிரேக்கரில் இருவரும் தலா ஒரு முறை அம்பை எய்தனர். இதில் ஓ ஜின் ஹைக் 9 புள்ளிகள் பெற்றார். அதானு தாஸ் துல்லியமாக எய்தி அதிகபட்சமான 10 புள்ளிகளை குவித்தார். இதனால் அதானு தாஸ் 6-5 என்ற கணக்கில் ஓ ஜின் ஹைக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியை கேலரியில் அமர்ந்து பார்த்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், அவருடைய மனைவியுமான தீபிகா குமாரி கைதட்டி அதானு தாசுக்கு உற்சாகம் அளித்தார். அடுத்த சுற்றில் அதானு தாஸ், ஜப்பான் வீரர் தகாஹரு புருகவாவுடன் மோதுகிறார்.

குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நேரடியாக களம் புகுந்த 32 வயது இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிச்சர்டோ பிரவுனை எதிர்கொண்டார். போட்டியின் போது வலது கண்ணின் மேல் பகுதியில் காயம் அடைந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் எதிராளிக்கு சகட்டுமேனிக்கு குத்துக்களை விட்ட சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் ரிச்சர்டோ பிரவுனை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் சதீஷ்குமார், உலக சாம்பியன் பகோதிர் ஜலோலாவுடன் (உஸ்பெகிஸ்தான்) வருகிற 1-ந் தேதி மல்லுக்கட்டுகிறார். இந்த சவாலை சதீஷ்குமார் சமாளித்து வெற்றி கண்டால் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார்.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் மானு பாகெர், ராஹி சர்னோபாத் உள்பட 44 பேர் கலந்து கொண்டனர். இதில் மானு பாகெர் 300-க்கு 292 புள்ளிகள் குவித்து 5-வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு (ரேபிட் சுற்று) முன்னேறினார். ராஹி சர்னோபாத் 287 புள்ளிகள் எடுத்து 15-வது இடம் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று முடிவில் மானு பாகெர் முதல் 8-வது இடத்துக்குள் நீடித்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

கோல்ப் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதலாவது சுற்று முடிவில் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி 8-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் உதயன் மானே கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். இன்னும் சில ரவுண்டுகளில் அவர்கள் விளையாட உள்ளனர்.

நீச்சலில் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 53.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தனது பிரிவில் 2-வது இடம் பெற்றார். மொத்தமாக 55 வீரர்கள் பங்கேற்ற இந்த தகுதி சுற்றில் 46-வது இடத்தை பிடித்த கேரளாவை சேர்ந்த 27 வயது சஜன் பிரகாஷ் அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் நடையை கட்டினார். இதன் மூலம் நீச்சலில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

பாய்மரபடகு போட்டியில் ஆண்களுக்கான ஸ்கிப் 49 இஆர் பிரிவின் 6-வது தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் கணபதி-வருண் தக்கர் இணை 7-வது இடத்தை பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்தத்தில் அந்த இணை 17-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இதில் 12 தகுதி சுற்றுகள் முடிவில் ‘டாப்10’ இடங்களுக்குள் வரும் அணிகள் பதக்கசுற்று வாய்ப்பை பெறும்.

ஆண்களுக்கான லேசர் ஸ்டான்டர்டு பிரிவின் 7-வது மற்றும் 8-வது தகுதி சுற்றில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் முறையே 27-வது, 23-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தத்தில் அவர் 23-வது இடத்தில் இருக்கிறார். பெண்களுக்கான லேசர் ரேடியல் பிரிவில் 7-வது, 8-வது தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் முறையே 22-வது, 20-வது இடத்தை பிடித்ததுடன் ஒட்டுமொத்தத்தில் 31-வது இடத்தில் உள்ளார்.

Next Story