துப்பாக்கி சுடுதல், வில்வித்தையில் தொடர்ந்து ஏமாற்றம்


துப்பாக்கி சுடுதல், வில்வித்தையில் தொடர்ந்து ஏமாற்றம்
x
தினத்தந்தி 30 July 2021 10:43 PM GMT (Updated: 2021-07-31T04:13:33+05:30)

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் மானு பாகெரும், வில்வித்தையில் தீபிகா குமாரியும் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறார்கள்.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்புள்ள போட்டியாக கணிக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல், வில்வித்தை இரண்டிலும் தொடர்ந்து கசப்பான அனுபவங்களே மிஞ்சுகின்றன. இதில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் களம் இறங்கிய இந்திய நட்சத்திரங்கள் மானு பாகெர், ராஹி சர்னோபாத் இருவரும் சொதப்பினர். 44 பேர் பங்கேற்ற இதற்கான தகுதி சுற்றில் இருந்து டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஆனால் மானு பாகெர் 582 புள்ளிகளுடன் 15-வது இடமும், சர்னோபாத் 573 புள்ளிகளுடன் 32-வது இடமும் தள்ளப்பட்டு வெளியேறினர். இத்துடன் இவர்களின் சவால் முடிவுக்கு வந்தது.

அரியானாவைச் சேர்ந்த 19 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டியில் மட்டும் 9 தங்கம் வென்றவர். ஆனால் ஒலிம்பிக்கில் இந்த அளவுக்கு அவரது குறி தவறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஆகிய 3 பிரிவுகளில் ஆடிய மானுபாகெர் ஒரு ஆட்டத்தில் கூட இறுதிப்போட்டியை எட்டவில்லை என்பது தான் வேதனையாகும். துப்பாக்கி சுடுதலில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 50 மீட்டர் 3 நிலை பிரிவு மட்டுமே இந்தியர்களுக்கு தற்போது மீதம் இருக்கிறது.

உலகின் ‘நம்பர் ஒன்’ வில்வித்தை வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரியின் ஒலிம்பிக் பதக்க கனவும் பொய்த்து போனது. நேற்று நடந்த பெண்களுக்கான ரீகர்வ் தனிநபர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தீபிகா 6-5 என்ற கணக்கில் ரஷியாவின் செனியா பெரோவை போராடி தோற்கடித்தார்.

அதைத் தொடர்ந்து கால்இறுதியில் தென்கொரிய ‘புயல்’ அன் சானை எதிர்கொண்டார். மொத்தம் 5 செட்டுகளில் மோத வேண்டும். ஒவ்வொரு செட்டின் வெற்றிக்கும் 2 புள்ளி வழங்கப்படும். யார் முதலில் 6 புள்ளியை எட்டுகிறாரே அவரே வெற்றியாளர் ஆவார். இதன்படி முதல் செட்டில் தீபிகா ஓரளவு சவால் கொடுத்தார். 70 மீட்டர் தூரம் கொண்ட இலக்கை நோக்கி 2 முறை துல்லியமாக அம்பு எய்து 10 புள்ளியும், இன்னொரு முறை 7 புள்ளியும் எடுத்தார். ஆனால் அன் சான் மூன்று வாய்ப்பிலும் 10, 10, 10 வீதம் புள்ளிகளை குவித்து மொத்தம் 30-27 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அடுத்த இரு செட்டுகளில் தீபிகாவின் அம்புகள், இலக்கை கச்சிதமாக பதம் பார்க்க தவறின. 3 முறை 7 புள்ளிகள் எடுக்கும் அளவுக்கு தடுமாறிய அவர் கடைசி இரு செட்டுகளில் 24- 26, 24-26 என்ற கணக்கில் பின்தங்கினார்.

முடிவில் அன் சான் 6-0 என்ற புள்ளி கணக்கில் தீபிகாவை வெளியேற்றினார். இறுதியில் அன் சானே இந்த பந்தயத்தில் தங்கத்தையும் வசப்படுத்தினார்.

3-வது முறையாக ஒலிம்பிக்குக்கு படையெடுத்த ஜார்கண்டை சேர்ந்த 27 வயதான தீபிகாவுக்கு இந்த தடவையும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இப்போது வில்வித்தை களத்தில் அவரது கணவரும், வீரருமான அதானு தாஸ் மட்டுமே நீடிக்கிறார்.

Next Story