டோக்கியோ பாராஒலிம்பிக்; முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை வென்றார்!


டோக்கியோ பாராஒலிம்பிக்; முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை வென்றார்!
x
தினத்தந்தி 25 Aug 2021 10:27 PM GMT (Updated: 25 Aug 2021 10:27 PM GMT)

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை பேஜ் கிரிகோ சுவைத்தார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

2-வது நாளான நேற்று இந்த பாராஒலிம்பிக்கின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை பேஜ் கிரிகோ சொந்தமாக்கினார். அவர் சைக்கிள் பந்தயத்தில் 3 ஆயிரம் மீட்டர் பர்சுயிட் தனிநபர் பிரிவில் (உடல் பாதிப்பில் சி1 பிரிவு) 3 நிமிடம் 50.815 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை முகர்ந்தார். சீனாவின் வாங் ஸியாவ்மி வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின் டெனிஸ் ஸ்சின்ட்லர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

சைக்கிள் பந்தயத்தில் சி5 பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தூரத்தை இங்கிலாந்து வீராங்கனை சாரா ஸ்டோரி 3 நிமிடம் 27.057 வினாடிகளில் எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 1992-ம் ஆண்டில் இருந்து பாராஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் 43 வயதான சாரா ஸ்டோரி ஆரம்பத்தில் நீச்சல் பந்தயத்தில் திறமையை காட்டினார். அதன் பிறகு சைக்கிளிங் போட்டிக்கு மாறி தொடர்ந்து கலக்கி வருகிறார். பாரா ஒலிம்பிக்கில் அவர் ருசித்த 15-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இவர் இடது கை ஊனமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு நேற்றைய தினம் ஏமாற்றமாக அமைந்தது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சோனால்பென் மனுபாய் பட்டேல் டி பிரிவில் தனது முதலாவது லீக்கில் சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். வீல்சேரில் அமர்ந்தபடி விளையாடிய சோனால்பென் 11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் 3-11, 9-11, 2-11 என்ற நேர் செட்டில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் சோவ் யிங்கிடம் பணிந்தார்.

இதற்கிடையே, பாராஒலிம்பிக் சாம்பியனான இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா, உலக சாம்பியனான சந்தீப் சவுத்ரி உள்ளிட்ட 12 பேர் அடங்கிய இந்திய அணியினர் நேற்று டோக்கியோ புறப்பட்டு சென்றனர்.

Next Story