தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி


image courtesy: BAI via ANI
x
image courtesy: BAI via ANI
தினத்தந்தி 8 May 2022 11:24 PM GMT (Updated: 8 May 2022 11:24 PM GMT)

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நேற்று தொடங்கியது.

பாங்காக், 

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நேற்று தொடங்கியது. இதில் தாமஸ் கோப்பை போட்டியில் 16 ஆண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியை பந்தாடியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-16, 21-13 என்றநேர் செட்டில் ஜெர்மனியின் வெய்ஸ்கிர் செனை எளிதில் தோற்கடித்தார். 

இதேபோல் ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனாய், இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஆகிய இந்தியர்களும் வெற்றியை தேடித்தந்தனர். 

பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் டி பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது. இதில் ஒற்றையரில் பி.வி.சிந்து, ஆகார்ஷி காஷ்யப், அஷ்மிதா சாலிஹா, இரட்டையரில் தனிஷா- திரிஷாஜாலி ஆகியோரது அபார ஆட்டத்தின் உதவியுடன் இந்தியா 4-1 என்றகணக்கில் கனடாவை வீழ்த்தியது.

Next Story