'எனது தவறால் அணியின் தங்கப்பதக்க வாய்ப்பு பறிபோனது' இந்திய வீரர் குகேஷ் பேட்டி


எனது தவறால் அணியின் தங்கப்பதக்க வாய்ப்பு பறிபோனது இந்திய வீரர் குகேஷ் பேட்டி
x

வலுவான நிலையில் இருந்த போது, நான் செய்த அற்ப தவறு அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

சென்னை,

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா 2-வது அணியில் சென்னையைச் சேர்ந்த டி.குகேஷ் முக்கிய பங்கு வகித்தார். 11 சுற்றுகளில் 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி கண்ட குகேஷ் பின்னர் அளித்த பேட்டியில்,

'இந்த போட்டி உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைந்தது. அணியின் ஒட்டு மொத்த செயல்பாடு பெருமைப்படும் வகையில் இருந்தது. நான் இவ்வளவு சிறப்பாக செயல்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நேற்று முன்தினம் நடந்த உஸ்பெகிஸ்தான் வீரர் அப்டுசாட்டோரோவுக்கு எதிராக மிகவும் நன்றாக விளையாடினேன்.

வலுவான நிலையில் இருந்த போது, நான் செய்த அற்ப தவறு அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த ஆட்டத்தில் நான் வெற்றியோ அல்லது டிராவோ செய்து இருந்தால் நமது அணி தங்கப்பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கும். ஆனால் விளையாட்டில் இதுபோல் நடப்பது சகஜம். இது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகும். 10-வது சுற்று தோல்வியால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். அதன் பிறகு விசுவநாதன் ஆனந்த் என்னை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

தான் விளையாடும் போது, இதுபோன்று நிறைய அனுபவங்களை சந்தித்து இருப்பதாக கூறினார். அவரது வார்த்தைகள் தோல்வி வேதனையில் இருந்து விடுபட உதவியது. தொடர்ந்து இதே போன்ற ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது இலக்காகும்' என்றார்.


Next Story