அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், பஸ்தா


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், பஸ்தா
x
தினத்தந்தி 6 Sep 2017 11:15 PM GMT (Updated: 6 Sep 2017 8:08 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயின் வீரர் பஸ்தா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் 9-வது நாளில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
ஒரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும் தரவரிசையில் 9-வது இடம் வகிப்பவருமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

முதல் இரு செட்டுகளை தலா ஒன்று வீதம் இருவரும் பகிர்ந்து கொண்ட நிலையில் டைபிரேக்கர் வரை நீடித்த 3-வது செட்டில் வீனசின் கை ஓங்கியது. முடிவில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரைஇறுதியை உறுதி செய்திருக்கும் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் மீண்டும் டாப்-5 இடத்திற்குள் நுழைகிறார்.

இதே போன்று ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- அனஸ்டசிஜா செவஸ்தோவா (லாத்வியா) இடையிலான மற்றொரு கால்இறுதி ஆட்டமும் அமைந்தது. 3 செட் வரை நகர்ந்த இந்த மோதலில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் செவஸ்தோவாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

அமெரிக்க ஓபனில் முதல் முறையாக அரைஇறுதிக்கு வந்திருக்கும் 83-ம் நிலை வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அடுத்து சக நாட்டவர் வீனஸ் வில்லியம்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 19-ம் நிலை வீரர் ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்தா 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். பஸ்தா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரைஇறுதிக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

நடப்பு தொடரில் ஒரு செட்டை கூட இழக்காத பஸ்தா கூறுகையில், ‘அரைஇறுதிக்கு முன்னேறியதை நம்பவே முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டது உண்டு. ஆனால் இங்கு வருகை தந்த போது இந்த நிலையை எட்டுவேன் என்று நினைக்கவே இல்லை. இறுதிஆட்டத்தில் சக நாட்டவர் ரபெல் நடாலை சந்தித்தால் அற்புதமாக இருக்கும்’ என்றார்.

இன்னொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7-6 (7-5), 6-7 (9-11), 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சாம் குயரியை சாய்த்து, கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 22 ஏஸ் சர்வீஸ்களை வீசி மிரட்டிய கெவின் ஆண்டர்சன் இந்த வெற்றியை ருசிக்க 3 மணி 25 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.
31 வயதான கெவின் ஆண்டர்சன் அடுத்து பஸ்தாவுடன் மோதுகிறார்.

Next Story