டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Australian Open Tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #sports #Tennis
மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையரில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள தாமஸ் பெர்டிச்சை (செக்குடிரசு) எதிர்கொண்டார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பெர்டிச் இரண்டு முறை (5-3 மற்றும் 6-5) செட்டை வெல்லும் வாய்ப்பு கிடைத்தும் நழுவவிட்டார். சரிவில் இருந்து மீண்ட பெடரர் டைபிரேக்கர் வரை போராடி முதலாவது செட்டை வசப்படுத்தினார். அடுத்த இரு செட்டுகளில் பெடரரின் அனுபவத்திற்கு முன்பு பெர்டிச்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. 2 மணி 14 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் நிறைவில் பெடரர் 7-6 (7-1), 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பெர்டிச்சை வெளியேற்றி ஆஸ்திரேலிய ஓபனில் 14-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 1977-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் தனது 42-வது வயதில் ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதிக்கு வந்தார். அதன் பிறகு அதிக வயதில் ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதியை எட்டியவர் என்ற சிறப்பு 36 வயதான பெடரருக்கு கிடைத்துள்ளது.

தென்கொரிய வீரர் மிரட்டல்

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 58-வது இடம் வகிக்கும் ஹியோன் சங் (தென்கொரியா) 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்டில் டென்னிஸ் சான்ட்கிரினை (அமெரிக்கா) சாய்த்து அரைஇறுதியை எட்டினார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் தென்கொரிய நாட்டவர் ஒருவர் அரைஇறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள 21 வயதான ஹியோன் சங் கூறுகையில் ‘கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நான் வரலாறு படைத்திருப்பதால் கொரியாவில் இப்போது அனைத்து மக்களும் ஆஸ்திரேலிய ஓபனை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மிஸ்சா ஸ்வெரேவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், நோவக் ஜோகோவிச் (6 முறை சாம்பியன்) போன்ற முன்னணி வீரர்களை எல்லாம் எப்படி வீழ்த்தினேன் என்றே தெரியவில்லை. கிராண்ட்ஸ்லாம் தொடரில் 2-வது வாரத்தில் இதற்கு முன்பு நான் விளையாடியது இல்லை. எல்லாமே வியப்பாக இருக்கிறது’ என்றார். ஹியோன் சங் அடுத்து பெடரருடன் மல்லுகட்ட காத்திருக்கிறார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஹாலெப்-கெர்பர்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மோதினார். தொடக்கத்தில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கிய ஹாலெப் அதன் பிறகு வரிசையாக 9 கேம்களை தனதாக்கி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். 71 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஹாலெப் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் 2016-ம் ஆண்டு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் கீஸ்சை (அமெரிக்கா) 51 நிமிடங்களில் பந்தாடினார். இந்த சீசனில் தொடர்ந்து 14 வெற்றிகளை குவித்துள்ள கெர்பர் தற்போது தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டாப்-10 இடத்திற்குள் நுழைவது உறுதியாகி விட்டது.

இன்று அரைஇறுதி

இன்று நடக்கும் அரைஇறுதியில் ஹாலெப்-கெர்பர் பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள். இருவரும் இதுவரை மோதியுள்ள 8 ஆட்டங்களில் தலா 4-ல் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஹாலெப் கூறும் போது, ‘நிச்சயம் அரைஇறுதி ஆட்டம், இன்னொரு நீண்ட நேரம் நீடிக்கும் மோதலாக அமையப்போகிறது. ஆனால் இத்தகைய ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. கெர்பர், மிகவும் சவால் மிக்க எதிராளி என்பதை அறிவேன். அதற்கு நான் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

பெண்கள் பிரிவின் மற்றொரு அரைஇறுதியில் எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்)- வோஸ்னியாக்கி (டென்மார்க்) மோதுகிறார்கள்.

போபண்ணா ஜோடி அசத்தல்

கலப்பு இரட்டையர் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரி வீராங்கனை டைமியா பபோஸ் ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் செபாஸ்டியன் கபால் (கொலம்பியா)- அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா) இணையை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்
ஆஸ்திரேலியஓபன் டென்னிஸ் போட்டியில், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜாம்பவானான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இளம் வீரர் சிட்சிபாசிடம் வீழ்ந்தார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.