உலக டென்னிஸ் தரவரிசையில் வோஸ்னியாக்கி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்


உலக டென்னிஸ் தரவரிசையில் வோஸ்னியாக்கி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்
x
தினத்தந்தி 29 Jan 2018 10:45 PM GMT (Updated: 29 Jan 2018 8:40 PM GMT)

உலக டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவில் உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சி முகர்ந்த டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (7,965 புள்ளிகள்) தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கியிடம் தோல்வி கண்ட ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (7,715 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சறுக்கினார்.

கால்இறுதியில் தோல்வி கண்ட உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (6,085 புள்ளிகள்) 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் தோல்வியை சந்தித்த ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (5,690 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்தார். கால்இறுதியில் தோல்வி கண்ட செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (5,445 புள்ளிகள்) 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு ஏற்றம் கண்டார். 3-வது சுற்றில் தோல்வியை சந்தித்த லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறினார். 4-வது சுற்றில் தோல்வி கண்ட பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா ஒரு இடம் முன்னேறி 7-வது இடம் பெற்றார்.

முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அரைஇறுதி வரை முன்னேறிய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 16-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு தாவினார். முதல் சுற்றில் தோல்வி கண்ட பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா லாட்னோவிச் ஒரு இடம் முன்னேறி 10-வது இடம் பிடித்துள்ளார்.

ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய சீனியர் வீரர் லியாண்டர் பெயஸ் 14 இடங்கள் முன்னேறி 47-வது இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த சேலஞ்சர்ஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் அவர் இந்த ஏற்றம் கண்டுள்ளார். இந்திய வீரர் ரோகன் போபண்ணா ஒரு இடம் சரிந்து 20-வது இடமும், மற்றொரு இந்திய வீரர் திவிஜ் சரண் 3 இடம் முன்னேறி 45-வது இடமும் பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 8 இடங்கள் முன்னேறி 118-வது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் பிராதான சுற்றுக்கு முன்னேறி அத்துடன் நடையை கட்டியதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறி இருக்கிறார். ராம்குமார் ஒரு இடம் முன்னேறி 140-வது இடமும், சுமித் நாகல் ஒரு இடம் பின்தங்கி 218-வது இடமும், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் 3 இடம் ஏற்றம் கண்டு 244-வது இடமும், ஸ்ரீராம் பாலாஜி 2 இடம் முன்னேறி 391-வது இடமும் பெற்றுள்ளனர்.

Next Story