மியாமி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு தகுதி


மியாமி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 26 March 2018 10:45 PM GMT (Updated: 26 March 2018 8:15 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மியாமி, 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ்சை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வீனஸ் வில்லியம்ஸ் தொடர்ச்சியாக அடுத்த 7 கேம்களில் தோல்வி கண்டு முதல் செட்டை இழந்தார். அடுத்த செட்டை எளிதாக கைப்பற்றிய வீனஸ், கடைசி செட்டில் 1-4 என்ற கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து அந்த செட்டை சொந்தமாக்கினார். முடிவில் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 5-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்ஸ்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளவருமான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீராங்கனையான எலிசா மெர்டென்ஸ்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 65 நிமிடம் தேவைப்பட்டது. 4-வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்-ஜோஹன்னா கோன்டா ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

மற்ற ஆட்டங்களில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 4-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் டாரியா காவ்ரிலோவாவையும் (ஆஸ்திரேலியா), லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென்கோ 6-2, 7-6 என்ற நேர்செட்டில் பிரேசிலின் ஹாட்டட் மரியாவையும் தோற்கடித்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஜப்பானின் நிஷிகோரியை சாய்த்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா வீரர் மரின் சிலிச் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் கனடாவின் வாசெக் பொஸ்பிசில்லை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னர் (அமெரிக்கா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), ஜெரோமி சார்டி (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றி கண்டனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-எடுவர்ட் ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 6-7 (5-7), 2-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சன்-சாம் குயரி இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

Next Story