மியாமி டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் ‘சாம்பியன்’


மியாமி டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 1 April 2018 10:30 PM GMT (Updated: 1 April 2018 8:03 PM GMT)

மியாமி டென்னிசில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ், ஆஸ்டாபென்கோவை நேர் செட்டில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்துடன் ரூ.8¾ கோடி பரிசுத்தொகையையும் அள்ளினார்.

மியாமி,

ஸ்டீபன்ஸ் சாம்பியன்

மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 12-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), தரவரிசையில் 5-வது இடம் வகிப்பவரும் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் (லாத்வியா) மல்லுகட்டினார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் களம் புகுந்த ஸ்டீபன்ஸ் முதல் செட்டை டைபிரேக்கர் வரை போராடி தனதாக்கினார். 2-வது செட்டில் ஆஸ்டாபென்கோ எந்தவித எதிர்ப்பும் இன்றி ‘சரண்’ அடைந்தார்

ஆஸ்டாபென்கோ பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை அதிகமாக (48 முறை) செய்ததால் சரிவில் இருந்து மீள முடியாமல் போய் விட்டது.

1 மணி 32 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பரிசுத்தொகை

25 வயதான ஸ்டீபன்சுக்கு இது 6 சர்வதேச பட்டமாகும். வாகை சூடிய அவருக்கு ரூ.8¾ கோடியும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. 2-வது இடத்தை பிடித்த ஆஸ்டாபென்கோவுக்கு ரூ.4¼ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்டீபன்ஸ் தரவரிசையில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் 9-வது இடத்தை பிடிக்கிறார்.

சகோதரர்கள் அசத்தல்

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க இரட்டை சகோதரர்களான 39 வயதான பாப் பிரையன்- மைக்பிரையன் இருவரும் இணைந்து 4-6, 7-6 (7-5), 10-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் காச்சனோவ்-ஆந்த்ரே ரப்லெவ் ஜோடியை தோற்கடித்து 5-வது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். ஒட்டுமொத்தத்தில் அவர்கள் கூட்டாக வென்ற 115-வது பட்டம் இதுவாகும்.

Next Story