தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக விஜய் அமிர்தராஜ் தேர்வு


தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக விஜய் அமிர்தராஜ் தேர்வு
x
தினத்தந்தி 20 Sep 2018 11:25 PM GMT (Updated: 20 Sep 2018 11:25 PM GMT)

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை,

இந்திய முன்னாள் முன்னணி டென்னிஸ் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான 64 வயது விஜய் அமிர்தராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்தி சிதம்பரம், விஜய் சங்கர், ஹரேஷ் ராமச்சந்திரன் ஆகியோரும், செயலாளராக பிரேம்குமார் கண்ணாவும், பொருளாளராக விவேக் ரெட்டியும், உறுப்பினர்களாக ஜாஸ்பர் கொர்னிலியஸ், எம்.சந்தர், ஷிவ்குமார் பழனி, கே.வித்யாசங்கர், டி.வி.சுப்பிரமணியம், முரளி பத்மநாபன், பி.வெங்கடசுப்பிரமணியம், கே.சுரேஷ், சாய் ஜெயலட்சுமி, அனுராதா ரவிசங்கர், ஜி.வைரவன், கே.மதுபாலன், மனோஜ் சந்தானி, டாக்டர் கே.ஷிவராம் செல்வகுமார் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விஜய் அமிர்தராஜ் அளித்த பேட்டியில், ‘2020-ம் ஆண்டுக்குள் ஆண்கள் அல்லது பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியை (ஏ.டி.பி. அல்லது டபிள்யூ.டி.ஏ) சென்னையில் நடத்துவதே எங்கள் இலக்காகும். அத்துடன் பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர்களை அழைத்து காட்சி ஆட்டம் நடத்துவதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். சென்னையில் டென்னிஸ் போட்டிக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. இங்குள்ளது போல் பிற மாவட்டங்களிலும் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வீரர்களின் உடல் தகுதியை வளர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.

Next Story