ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட தகுதி பெற்றார், குணேஸ்வரன்


ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட தகுதி பெற்றார், குணேஸ்வரன்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 10:36 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட இந்திய வீரர் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்கள் அங்கு தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் தகுதி சுற்றின் 3-வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் யோசுக் வாடானுகியை நேற்று எதிர்கொண்டார். இதில் குணேஸ்வரன் 6-7 (5), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாட தகுதி பெற்ற 3-வது இந்தியர் குணேஸ்வரன் ஆவார். ஏற்கனவே சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் ஆடியிருக்கிறார்கள்.

முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பிரதான சுற்றை எட்டியதால் மகிழ்ச்சியில் திளைக்கும் சென்னையைச் சேர்ந்த 29 வயதான குணேஸ்வரன் அடுத்து ஆஸ்திரேலிய ஓபனில், முதலாவது சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவுடன் மோத இருக்கிறார்.

தகுதி சுற்றில் மூன்று ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த குணேஸ்வரன் பிரதான சுற்றுக்கும் வந்து விட்டதால் குறைந்தது அவருக்கு ரூ.38 லட்சம் பரிசு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.


Next Story