டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை தொடக்கம்


டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:15 PM GMT (Updated: 30 Jan 2019 8:35 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.

கொல்கத்தா, 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, இத்தாலியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள சவுத் கிளப் மைதானத்தில் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சகெத் மைனெனி, ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மூத்த வீரர் லியாண்டர் பெயஸ் சேர்க்கப்படவில்லை.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஸ்பெயினில் நவம்பர் மாதம் நடைபெறும் 18 அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். இத்தாலி-இந்தியா அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இத்தாலி அணி 4 முறையும், இந்திய அணி ஒரு தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரு அணிகளும் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கின்றன. கடைசியாக 1998-ம் ஆண்டில் மோதி இருந்தன.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் விளையாடாத கேப்டன் மகேஷ் பூபதி அளித்த பேட்டியில், ‘புல்தரை மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இத்தாலி அணியை வீழ்த்த நல்ல வாய்ப்பாக நாங்கள் உணருகிறோம். கடினமான மற்றும் களிமண் தரை மைதானத்தில் போட்டி நடந்தால் அது இத்தாலி அணிக்கு அனுகூலமாக இருக்கும். புல்தரை மைதானத்தில் ஆடிய அனுபவம் இத்தாலி அணிக்கு அதிகம் கிடையாது.

தற்போது புல்தரை மைதானத்தில் ஆடும் வாய்ப்பை நாம் பெற்று இருக்கிறோம். இது நமக்கு ஏற்ற மைதானம் என்பதால் இதில் எந்தவித சாக்கு போக்கும் சொல்ல இடமில்லை. 5 செட்டில் மூன்றை கைப்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று இருந்த முந்தைய ஆட்ட முறையை மாற்றம் செய்து 3 செட்டில் 2 செட்டை கைப்பற்றும் அணி வெற்றி பெறும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்து இருப்பது நமக்கு சாதகமான அம்சமாகும். நம்மை விட சிறந்த வீரர்களை 2 செட் ஆட்டத்தில் வீழ்த்துவது என்பது எப்பொழுதும் எளிதானதாகும். உலக சுற்றில் தொடர்ச்சியாக விளையாடும் வலுவான அணிகளுடன் இந்த புதிய விதிமுறையில் ஆடுவது இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும். உலக தரவரிசையில் இத்தாலி அணி நம்மை விட 9 இடங்கள் முன்னிலை வகித்தாலும், நமது அணி வீரர்கள் எல்லோரும் நல்ல பங்களிப்பை அளித்தால் அந்த அணிக்கு அதிர்ச்சி அளிக்க முடியும்’ என்றார்.

Next Story