இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி


இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 8:44 PM GMT)

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், டொமினிக் திம், பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 37 வயது ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆஸ்திரியாவை சேர்ந்த 25 வயதான டொமினிக் திம்மை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் முதல் செட்டை எளிதில் தனதாக்கினார். ஆனால் அதன் பிறகு பெடரர் ஆட்டத்தில் அதிக தவறுகள் இழைத்து தொய்வு கண்டார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட டொமினிக் திம் சரிவில் இருந்து மீண்டு வந்து அசத்தினார்.

2 மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் டொமினிக் திம் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி முதல்முறையாக இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அத்துடன் சமீபத்தில் 100-வது பட்டத்தை வென்று சாதித்து இருந்த பெடரர் 6-வது முறையாக இந்த பட்டத்தை வெல்லும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

வெற்றிக்கு பிறகு டொமினிக் திம் அளித்த பேட்டியில், ‘என்ன நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு வினாடியையும் நான் அனுபவித்து விளையாடினேன். முதல் செட்டில் பெடரர் அற்புதமாக ஆடினார். அந்த செட்டில் நான் சற்று தடுமாறினேன். எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீண்டேன். எல்லா நேரங்களிலும் மிகப்பெரிய ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் பெடரர். இதுபோன்ற பெரிய போட்டியில் என்னை போன்ற வீரர்கள் அவரை வீழ்த்துவது என்பது அபாரமானதாகும்’ என்று தெரிவித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), வைல்டு கார்டு மூலம் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெற்ற 18 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவை சந்தித்தார்.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். இதன் மூலம் இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற முதல் வைல்டு கார்டு வீராங்கனை மற்றும் 2-வது இளம் வீராங்கனை என்ற பெருமையை பியான்கா ஆன்ட்ரீஸ்கு பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பியான்கா ஆன்ட்ரீஸ்கு அளித்த பேட்டியில், ‘அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை எனக்கு மோசமான நாளாக அமையலாம். என்னை எதிர்த்து விளையாடும் வீராங்கனை நம்ப முடியாத வகையில் விளையாடலாம். இருப்பினும் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நெருக்கடி இருக்காது. என்னுடைய செயல்பாட்டால் தான் எனக்கு நெருக்கடி உருவாகும் என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறினார்.

Next Story