பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர் வெற்றி கெர்பர் அதிர்ச்சி தோல்வி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர் வெற்றி கெர்பர் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 26 May 2019 10:00 PM GMT (Updated: 26 May 2019 8:44 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார். கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

பெடரர் அபாரம்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. ‘களிமண் தரை’ போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இத்தாலியின் லோரென்ஜா சோனிகோவை (இத்தாலி) சந்தித்தார். 2015-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனில் கால்பதித்த பெடரர் மைதானத்திற்குள் நுழைந்த போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 1 மணி 41 நிமிடங்களில் வெற்றியை ருசித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-2, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் மார்டெரரை (ஜெர்மனி) விரட்டியடித்தார். மரின் சிலிச் (குரோஷியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் வெற்றி கண்டனர்.

சென்னை வீரர் தோல்வி

ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஒரே இந்தியரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அவரை ஹூகோ டெலியன் (பொலிவியா) 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரமும், தற்போது 5-வது இடத்தில் உள்ளவருமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று போனார். தரவரிசையில் 81-வது இடத்தில் உள்ள ரஷியாவின் அனஸ்டசியா பொட்டாபோவா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் விம்பிள்டன் சாம்பியனான கெர்பரை வெளியேற்றினார். 18 வயதான பொட்டாபோவா தனது அறிமுக பிரெஞ்ச் ஓபன் ஆட்டத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மட்டையை சுழட்டி அசத்தியிருக்கிறார்.

வீனஸ் வெளியேற்றம்

இதே போல் மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3-6, 3-6 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார்.

அதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தன்னை எதிர்த்த மேடிசன் பிரிங்கிளை (அமெரிக்கா) 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), மிலாடெனோவிச் (பிரான்ஸ்), பென்சிச் (சுவிட்சர்லாந்து) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

Next Story