பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா, ஹாலெப் வெற்றி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா, ஹாலெப் வெற்றி
x
தினத்தந்தி 28 May 2019 10:00 PM GMT (Updated: 28 May 2019 8:36 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (7-4), 6-3, 2-6, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 8 நிமிடம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் கச்சனோவ் 6-1, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் செட்ரிக் மார்செலை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), லூகாஸ் போலே (பிரான்ஸ்), பாபியோ போக்னினி (இத்தாலி), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் வெற்றி கண்டனர்.

ஆஸ்டாபென்கோ தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 2017-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) சாய்த்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ) 6-1, 7-5 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீராங் கனை கிர்ஸ்டென் பிலிப்கென்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதே போல் ‘நம்பர் ஒன்’ புயல் நவோமி ஒசாகா (ஜப்பான்) 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த டோம்ஜனோவிச்சை (ஆஸ்திரேலியா) 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்), சபலென்கா (பெலாரஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் தடையை கடந்தனர்.


Next Story