டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி + "||" + French Open Tennis: Zogovic, Serena qualifies for the 3rd round

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜோகோவிச், செரீனா ஆகியோர் 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜோகோவிச், செரீனா ஆகியோர் 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஜோகோவிச்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6–1, 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஹென்றி லாக்சோனெனை (சுவிட்சர்லாந்து) எளிதில் தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் அடுத்து இத்தாலி தகுதி நிலை வீரர் சல்வாடோர் கருசோவை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 4–ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6–3, 6–7 (6–8), 6–3, 7–5 என்ற செட் கணக்கில் போராடி அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) வீழ்த்தினார். இதே போல் முன்னணி வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6–1, 6–3, 7–6 (7–3) என்ற செட் கணக்கில் மைக்கேல் யமிரை (சுவீடன்) வென்றார்.

செரீனா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்து ஆடிய தகுதிநிலை வீராங்கனை குருமி நராவை (ஜப்பான்) 6–3, 6–2 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 4–6, 7–5, 6–3 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) போராடி வீழ்த்தி 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதில் முதல் செட்டை பறிகொடுத்து 2–வது செட்டிலும் 2–4 பின்தங்கி இருந்த ஒசாகா அதன் பிறகு எழுச்சி பெற்ற வெற்றியை வசப்படுத்தி விட்டார். அஸரென்காவின் சவாலை முடிவுக்கு கொண்டு வர ஒசாகாவுக்கு 2 மணி 50 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இதே போல் ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ) 6–3, 6–1 என்ற நேர் செட்டில் டாரியா கசட்கினாவை (ரஷியா) வெளியேற்றினார்.